

மிதுன் மாணிக்கமும், ரம்யா பாண்டியனும் கருப்பன், வெள்ளையனை குழந்தைகளை போல் வளர்த்து வருகிறார்கள். ஒரு நாள் கருப்பன், வெள்ளையன் என இரண்டு மாடுகளும் காணாமல் போகின்றன. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் ஏற்க மறுக்கிறார்கள்.
இறுதியில் கருப்பன், வெள்ளையனை மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன் இருவரும் கண்டு பிடித்தார்களா? காணாமல் போக என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மிதுன் மாணிக்கம், அறிமுகம் என்று தெரியாதளவிற்கு நடிப்பில் பளீச்சிடுகிறார். பல இடங்களில் யதார்த்தமான நடிப்பை கொடுத்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ரம்யா பாண்டியன், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். மாடுகள் மீது அக்கறை காட்டுவது, அவர்களுடன் பழகுவது என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். மிதுன் மாணிக்கத்தின் நண்பராக வரும் வடிவேல் முருகன், டைமிங் காமெடியில் அசத்தி இருக்கிறார். செய்தியாளராக வரும் வாணி போஜன், அளவான நடிப்பை கொடுத்து கவர்ந்திருக்கிறார்.
கிராமத்து பின்னணியில் அழகான கதையை பாசம், அரசியல் கொண்டு இயக்கி, அறிமுக படத்திலேயே அசத்தி இருக்கிறார் அரிசில் மூர்த்தி. மாடுகளுக்கும், குடும்பத்தினருக்கும் உள்ள பாசத்தை இன்னும் அழுத்தமாக சொல்லி இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம். மாடுகளை வைத்தே முழு திரைக்கதையும் நகருவதால், ஒரு கட்டத்தில் சோர்வை ஏற்படுத்துகிறது.
கிரிஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாகவே கொடுத்து இருக்கிறார். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கும் பாடகர் கிரிஷ், சிறந்த இசையமைப்பாளராக வலம் வருவார் என்று சொல்லலாம். சுகுமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ சுமாரான ஆட்சி.