குறிப்பிட்ட சமூகத்தினரை அவதூறாக பேசிய விவகாரம் - நடிகை மீரா மிதுனுக்கு போலீஸ் சம்மன்

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை மீரா மிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மீரா மிதுன்
மீரா மிதுன்
Published on

தமிழில், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார். சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வரும் இவர், சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை யூடியூப்பில் பதிவிட்டார். 

அதில், குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை குறிவைத்து அந்தப் பிரிவைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் குறித்து கொச்சையாகப் பேசியும், அவர்களை திரைத்துறையில் இருந்து அகற்றுவது அவசியம் எனவும் பேசியிருந்தார். 

மேலும், அப்பிரிவைச் சேர்ந்த அனைவரும் குற்றப் பின்னணி உடையவர்களாக இருப்பதால்தான் அவர்களை அனைவரும் தூற்றுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மீரா மிதுன்

இதையடுத்து குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை இழிவாகப் பேசிய நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு கடந்த சில தினங்களுக்கும் முன்னர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கோரி நடிகை மீரா மிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com