எந்த பாத்திரத்தையும் ஏற்று நடித்தால் தான் திறமை வெளிப்படும்: வரலட்சுமி சரத்குமார்

நடிப்பதற்கு வந்துவிட்டால், எந்த பாத்திரத்தையும் ஏற்று நடிக்க வேண்டும். மோசமான பாத்திரங்களாக இருந்தாலும் அதில் நடிப்பது தான் திறமை என்று நடிகை வரலட்சுமி கூறியிருக்கிறார்.
எந்த பாத்திரத்தையும் ஏற்று நடித்தால் தான் திறமை வெளிப்படும்: வரலட்சுமி சரத்குமார்
Published on

வரலட்சுமி சரத்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு மகளாக நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக சந்திர மவுலி நடிக்கிறார். கதாநாயகி வீட்டின் எதிரே கதாநாயகனின் வீடு உள்ளது. இருவரும் காதலிக்கிறார்கள். காதலனை காண, காதலி வீட்டின் அருகே துணிகளை இஸ்திரி செய்து கொண்டிருக்கும் ஒரு தள்ளு வண்டி பக்கத்தில் நின்று துணி தேய்ப்பவரிடம் விசாரிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

படப்பிடிப்பு இடைவேளையின் போது வரலட்சுமி சரத்குமார் நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் தற்போது நிபுணன், விக்ரம் வேதா, எச்சரிக்கை, சத்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். மலையாளத்தில் 2 படங்களில் நடிக்கிறேன். இது தவிர மேலும் 3 தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன். இதை தொடர்ந்து சண்டைக்கோழி-2 படத்திலும் நடிக்க உள்ளேன். படத்தின் கதையை வைத்துதான் நான் நடிப்பதை தேர்வு செய்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

குற்றாலம் அருகே உள்ள இலஞ்சியில் நடைபெற்ற சினிமா படப்பிடிப்பில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்த காட்சி.

பின்னர் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி:- தாரை தப்பட்டை படத்தில் நீங்கள் குண்டாக இருந்தீர்கள். இப்போது உடல் எடை குறைந்து மெலிவாக இருக்கிறீர்களே இது எப்படி?

பதில்:- இது ஒரு பெரிய விஷயம் இல்லை. கரகாட்டம் ஆடும் பாத்திரத்தில் அந்த உடல் தேவைப்பட்டது. அதற்காக அவ்வாறு மாறினேன். இப்போது அது தேவையில்லை. எனவே உடலை குறைத்துக்கொண்டேன்.

கேள்வி:- நயன்தாரா, திரிஷா போன்றவர்கள் படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தான் தேர்வு செய்வதாக சமீபத்தில் கூறியிருந்தார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- நடிப்பதற்கு என்று வந்துவிட்டால், இந்த கேரக்டரில்தான் நடிப்பேன், அந்த கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்று கூறக்கூடாது. நடிகை என்றால் எல்லா பாத்திரங்களிலும் நடிக்க வேண்டும். மோசமான பாத்திரங்களாக இருந்தாலும் அதில் நடிப்பது தான் திறமை. என்னிடம் வருபவர்கள் எல்லாம் அது போன்றுதான் கூறுகிறார்கள். என்னை தேடி அந்த பாத்திரங்கள் வருகின்றன. அவர்களிடம் அவ்வாறு யாரும் போவதில்லை. இதுதான் விஷயம்.

இவ்வாறு அவர் கூறினார்.

படத்தின் தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம் கூறியதாவது:-

‘காதல் மன்னன்’ படத்தில் புதுமுகங்களே இல்லை. வரலட்சுமி சரத்குமார் படப்பிடிப்பில் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் ஒத்துழைப்பு கொடுக்கிறார். இதுபோல விமல் மற்றும் அனைத்து நடிகர்களும் தொழிற்கலைஞர்களும் ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். இதனால் இந்த படப்பிடிப்பு தொடங்கிய 9 நாட்களில் 35 நிமிட படக்காட்சிகள் படமாக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டன. வருகிற அக்டோபர் மாதம் ஆடியோ வெளியிடப்படுகிறது. டிசம்பர் மாதம் படம் திரைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com