

பாரதியாக நடித்து பிரபலம் ஆனவர் சாயாஜி ஷிண்டே. இவரது வித்தியாசமான நடிப்பில் ‘அகோரி’ என்கிற படம் தயாராகி வருகிறது. சாயாஜி ஷிண்டே இதில் அகோரியாக நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னை பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான ஹரிதுவார் செட் அமைத்து 150 அகோரிகளுடன் நடித்த காட்சி படமாக்கப்பட்டது.
மேலும் கேரளா காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு 200 அகோரிகள் நடிக்கும் காட்சிகள் படமாகியுள்ளன. இப்படத்தில் நடிப்பது பற்றி அவர் பேசும் போது, “தமிழில் பாரதி படம் எனக்கு அழுத்தமான அறிமுகம் கொடுத்தது. அதன் பிறகு குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை என்று விதவிதமான பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடிக்கக் கேட்டபோது அவர்கள் சொன்ன கதை எனக்குப் பிடித்திருந்தது.
இப்படத்தில் நான் ஓர் அகோரியாக அதாவது சிவனடியாராக நடிக்கிறேன். நான் அகோரியைச் சந்தித்து இருக்கிறேன். அவர்களிடம் ஆசியையும் பெற்று இருக்கிறேன். அப்படிப்பட்ட அகோரியாக நானே நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் பாத்திரமும் அதன் தோற்றமும் நடிப்பும் என் வாழ்வில் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.