சாவி

ஆர்.சுப்ரமணியன் இயக்கத்தில் பிரகாஷ் சந்திரா - சுனு லக்‌ஷ்மி நடிப்பில் வெளியாகி இருக்கும் `சாவி' படத்தின் விமர்சனம்.
சாவி
Published on

சாவி செய்யும் தொழில் செய்து வருகிறார் நாயகன் பிரகாஷ் சந்திரா. அவரது அண்ணன் ஆட்டோ ஓட்டி வருகிறார். நாயகி சுனு லட்சுமியை, பிரகாஷ் சந்திராவுக்கு நிச்சயம் செய்திருக்கின்றனர். அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில், பிரகாஷ் சந்திராவின் அண்ணன் கொலை செய்யப்படுகிறார். 

அதேநேரத்தில் மற்றொரு வீட்டில் கொள்ளை சம்பவம் ஒன்றும் அரங்கேறுகிறது. இரண்டு குற்றங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பிரகாஷ் சந்திராவின் அண்ணன் கொலை குறித்து நாயகனின் அப்பாவிடம் விசாரணை நடத்தும் போது தனது குடும்பத்தில் உள்ளவர்கள் குறித்து அவர் போலீசிடம் தெரிவிக்கிறார். 

மறுபுறத்தில் கொள்ளை நடந்த வீட்டின் பூட்டை உடைக்காமலும், எந்த சேதமும் செய்யாமல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த இரு குற்றங்களும் நாயகனுக்கு எதிராக திரும்ப, பிரகாஷ் சந்திரா அதனை எப்படி எதிர்கொண்டார்? பிரகாஷ் சந்திராவின் அண்ணனை கொன்றது யார்? கொள்ளை அடித்ததற்கும், அவருக்கும் சம்பந்தம் இருக்கிறதா? இந்த இரண்டு பிரச்சனையையும் அவர் எப்படி எதிர் கொண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

சாவி செய்யும் இளைஞனாக, கொலை பழி, கொள்ளை பழியை எதிர்கொள்ளும் சாதாரண இளைஞனாக பிரகாஷ் சந்திரா யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சுனு லக்‌ஷ்மி அவரது கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். ராஜ லிங்கம், உதயபானு மகேஷ்வரன், ஸ்டில்ஸ் குமார், கவிஞர் நந்தலாலா உள்ளிட்ட அனைவருமே யதார்த்தமாக நடித்திருப்பது படத்திற்கு பலமாக அமைந்தது. 

மதுரையில் வாழும் இளைஞன் ஒருவன், அவன் வாழ்வில் ஏற்படும் திடீர் திருப்பங்கள், அவனது வாழ்க்கையில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை யதார்த்தமாக காட்டியிருக்கும் ஆர்.சுப்ரமணியனுக்கு பாராட்டுக்கள். யதார்த்த சினிமா வரிசையில் இந்த படம், பழகிய திசையில் பயணிக்கும் கதைக்கு புதிய திசைகளை திறக்கும்படியாக திரைக்கதை நகர்வது சிறப்பு. 

சதீஷ் தாயன்பன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். சேகர் ராமின் ஒளிப்பதிவில் படம் சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. 

மொத்தத்தில் `சாவி' வித்தியாசமானது. 

X

Maalai Malar
www.maalaimalar.com