

ஜெய்ப்பூர்:
ராஜபுத்திர வம்சத்தையும், ராணி பத்மாவதியையும் இழிவு படுத்துவதாக கூறி கர்னி சேனா அமைப்பினர் படப்பிடிப்பு நடந்தபோது ரகளையில் ஈடுபட்டு இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலியை தாக்கி பொருட்களை சூறையாடினர்.
ராணி பத்மாவதி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே நாக்கை வெட்டினால் ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் கோர்ட்டு உத்தரவுப்படி பத்மாவத் படம் சமீபத்தில் வெளியானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் கர்னி சேனா அமைப்பினர் கலவரம் செய்தனர்.
வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. பள்ளி குழந்தைகள் சென்ற வேன் மீது கற்கள் வீசப்பட்டன.
இந்த நிலையில் பத்மாவத் படத்துக்கு எதிரான போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கர்னிசேனா அமைப்பினர் அறிவித்ததாக இன்று பிற்பகல் தகவல்கள் வெளியானது. இந்த தகவலை ஸ்ரீ ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் நிறுவன தலைவர் லோகேந்திர சிங் வன்மையாக மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக, ஜெய்ப்பூர் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘இந்தியாவில் ஏராளமான போலி கர்னி சேனா அமைப்புகள் பெருகி வருகின்றன. தனிப்பட்ட லாபத்துக்காக இதுபோன்ற எட்டு போலி கர்னி சேனாக்கள் இயங்குகின்றன. ஆனால், நாட்டில் இயங்கிவரும் ஒரேயொரு ராஜபுத்திர கர்னி சேனா எங்கள் அமைப்புதாம். அதன் நிறுவன தலைவர் நான் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
போலியாக இயங்கிவரும் இந்த கர்னி சேனாக்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். பத்மாவத் படத்துக்கு எதிராக முதன்முதலாக போராட்டத்தை தொடங்கியது நாங்கள்தான். அந்த போராட்டத்தை நாங்கள் கைவிடவில்லை. தொடர்ந்து வருகிறோம். இனியும் தொடருவோம்.
ஆனால், சில போலி கர்னி சேனாக்களின் போலி செய்திகளின் மூலம் பத்மாவத் படத்துக்கு எதிரான போராட்டம் கைவிடப்பட்டதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை’ என்று தெரிவித்துள்ளார். #Padmaavat #DeepikaPadukone #RanveerSingh