பொள்ளாச்சி சம்பவம் - குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் : நடிகைகள் ஆவேசம்

பொள்ளாச்சியில் பெண்கள் பலர் பாலியல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சம்பவம் குறித்து நடிகைகள் ஆவேசமாக கருத்து கூறியிருக்கிறார்கள். #PollachiAbuseCase #PollachiCase
பொள்ளாச்சி சம்பவம் - குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் : நடிகைகள் ஆவேசம்
Published on

பொள்ளாச்சியில் பெண்கள் பலர் பாலியல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சம்பவத்தில் பல பிரபலங்கள் தங்களுடைய ஆதங்கத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை அதுல்யா ரவி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

‘பாதிக்கப்பட்ட பெண்கள் இனிதான் தைரியமாக இருக்க வேண்டும். இந்த வி‌ஷயத்தை தாண்டி வரவேண்டும். ஒரு சிலர் செய்யும் தவறால் நாம் நல்ல ஆண்களையும் தவறாக பார்க்க வேண்டியிருக்கிறது.

மற்ற நாடுகளில் இது மாதிரி வி‌ஷயங்களுக்கு என்ன தண்டனை கொடுப்பார்களோ அதைக் கொடுத்தால்தான் அடுத்து பண்ணணும்னு நினைக்கிறவர்களும் பயப்படுவார்கள். இதை அரசியலாக மட்டும் மாற்றி விடாதீர்கள். இவர்களுக்குப் பெரிய தண்டனை கொடுக்காமல் விட்டு விடாதீர்கள்.

யாரையும் நம்பாமல் நம்மால் வாழ முடியாது தான். அதேநேரம் நீங்கள் நம்புகிற, காதலிக்கற யாராக இருந்தாலும் சரி, அவருடன் பைக்கிலோ, காரிலோ தனியாக போவதை தவிர்த்து விடுங்கள். சந்திக்கிற இடம் பொது இடமாக இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்கள் பையில் ஒரு தற்காப்பு பொருளை வைத்துக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் 200-க்கும் மேற்பட்டோர் எனக் கேட்கும்போது பதறுகிறது. இன்னும் நீங்கள் மனதளவில் உறுதியுடன் இருக்க வேண்டும்.

காளி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படங்களின் கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத் கூறியதாவது:-

நட்பான குடும்பம் அமையாததே, பல பெண்கள் வெளியில் அன்பைத் தேட காரணம். வீட்டில் மனம் விட்டுப் பேசி, நட்பாய் பழக ஆட்கள் இருந்தால், எந்தப் பெண்ணிற்கும் வெளியில் அதனைத் தேட வேண்டிய தேவை இருக்காது.

வரலட்சுமி சரத்குமார் கூறும்போது,

‘பெண்ணை வைத்து விளையாடுகிறீர்களா? மீண்டும் மீண்டும் அதே கொடூர குற்றம். அப்புறம் ஒரு பக்கம் மகளிர் தினம் வேறு. இந்த சமூகத்திற்கு பெண் என்றால் இதுதான் அர்த்தமா? பொள்ளாச்சி பலாத்காரர்களை தோலுரித்துக் கொல்ல வேண்டும்.

இந்த மாதிரியான உலகத்தில்தான் நாம் வாழ்கிறோமா? பலாத்காரத்துக்கு மரண தண்டனை. இது மட்டும்தான் ஒரே வழி.

நடிகை ராசிகன்னா கூறும்போது:-

பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்னை மிகவும் பாதிக்கிறது. நடந்தது எல்லாம் மிகவும் கொடூரமாக இருக்கிறது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை அவர்கள் முதுகெலும்பை நொறுக்குவதாக இருக்க வேண்டும். இந்த அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள பதிவில் ‘இனியும் நாம் மவுனம் காக்கத்தான் வேண்டுமா? பதில் சொல்ல வேண்டியவர் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com