கந்து வட்டியின் பின் புலத்தை பகிரங்கமாக சொல்லும் படம் - பொது நலன் கருதி விமர்சனம்

சீயோன் இயக்கத்தில் கருணாகரன் - சந்தோஷ் பிரதாப் - அருண் ஆதித் - அனுசித்தாரா, சுபிக்‌ஷா, லிசா நடிப்பில் வெளியாகி இருக்கும் `பொது நலன் கருதி' படத்தின் விமர்சனம். #PodhuNalanKaruthi #PodhuNalanKaruthiReview #Karunakaran
கந்து வட்டியின் பின் புலத்தை பகிரங்கமாக சொல்லும் படம் - பொது நலன் கருதி விமர்சனம்
Published on

டாக்சி டிரைவராக இருக்கும் கருணாகரனின் அண்ணன் காணாமல் போகிறார். அவரைத் தேடிக்கொண்டே டாக்சி ஓட்டி வருகிறார் கருணாகரன். கந்துவட்டி கொடுக்கும் யோக் ஜேபி கும்பலிடம் அடியாளாக வேலை பார்ப்பவர் சந்தோஷ். மெக்கானிக்காக இருக்கும் அருண் ஆதித் தனது காதலி சுபிக்‌ஷாவுக்காக பைனான்ஸ் மூலம் வண்டி வாங்கி கொடுக்கிறார். 

இந்த 3 பேரின் வாழ்க்கையும் கந்துவட்டியால் இணைகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது? அவர்களின் வாழ்க்கைப் பாதை எப்படி மாறுகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.

அண்ணனை தேடுவது, காதலியிடம் கெஞ்சுவது, கந்துவட்டி கும்பலின் பின்னணி தெரிந்ததும் தப்பி ஓடுவது என்று கருணாகரன் சிறப்பாக நடித்திருக்கிறார். 

மிரட்டி வசூல் செய்யும் அடியாள் வேடத்தில் சந்தோஷ். ஒரு கட்டத்தில் நிதர்சனம் புரிந்து அவர் சாந்தமாவது, இறுதிக்காட்சியில் வஞ்சத்தால் வீழ்த்தப்படுதல் என அவருக்கும் இது முக்கியமான படம். யோக் ஜேபி வில்லனாக மிரட்டி இருக்கிறார். அருண் ஆதித் சாதாரண இளைஞனாகவும், காதல் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இமான் அண்ணாச்சி ஒரு சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.

அனுசித்தாரா, சுபிக்‌ஷா, லிசா என 3 கதாநாயகிகள். மூவரில் சுபிக்‌ஷா கவனிக்க வைக்கிறார். அவரது கதாபாத்திரம் படத்தில் திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

கந்துவட்டி என்று சாதாரணமாக சொல்லிவிடக்கூடிய வி‌ஷயத்தின் பின்னணியில் இருக்கும் தாதா கும்பல், போலீஸ் பின்னணி, அரசியல் ஆதரவு அனைத்தையும் திரில்லர் கதையாக கூறி இருக்கிறார் அறிமுக இயக்குனர் சீயோன். அன்றாடம் நடக்கும் பகீர் சம்பவங்களை கதையில் கோர்த்த விதத்தில் நம்பிக்கை இயக்குனராக தெரிகிறார்.

5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையையும் கந்து வட்டி கொடுமைகளையும் கந்துவட்டி கும்பல்களால் சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை பற்றியும் பேசியதற்காக இயக்குனருக்கு பாராட்டுகள். எனினும் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். கந்துவட்டி பற்றி அனைவரும் ரசிக்க விதத்தில் திகில் படமாக கொடுத்த விதத்தில் பொது நலன் கருதி தலைப்புக்கு நியாயம் செய்து இருக்கிறது.

ஹரி கணேஷ் இசை, சுவாமிநாதன் ஒளிப்பதிவு இரண்டும் கச்சிதம். கிரைசின் படத்தொகுப்பில் சில காட்சிகளை கத்தரித்து இருக்கலாம்.

மொத்தத்தில் `பொது நலன் கருதி' பார்க்க வேண்டும். #PodhuNalanKaruthi #PodhuNalanKaruthiReview #Karunakaran #SanthoshPrathap #ArunAdith #AnuSithara #Subhiksha #Leesa #Zion

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com