சிறுநீரகங்கள் செயலிழந்தன.... உயிருக்கு போராடும் பரவை முனியம்மா

சிறுநீரகங்கள் செயலிழந்ததால் பரவை முனியம்மாவின் உடல் நிலை மோசமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பரவை முனியம்மா
பரவை முனியம்மா
Published on

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பரவை பகுதியைச் சேர்ந்தவர் பரவை முனியம்மா (வயது 85). நாட்டுப்புற பாடகியான இவர், கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ‘தூள்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் பாடிய “சிங்கம் போல” என்ற பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பரவை முனியம்மா பிரபலமானார்.

இதைத்தொடர்ந்து சினிமாவில் பிஸியான பரவை முனியம்மா 80-க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்தார். இறுதியாக 2014-ம் ஆண்டு சிவகார்த்திகேயனின் மான் கராத்தே படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் படவாய்ப்புகள் குறைந்தன.

இதையடுத்து பரவை முனியம்மா தனது சொந்த ஊரிலேயே வசித்து வருகிறார். இவரது கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு 3 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். மாற்றுத்திறனாளி மகன் செந்தில்குமாரை தவிர அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. உடல் நலக்குறைவால் பரவை முனியம்மா அவதிப்பட்டு வருவதை அறிந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.6 லட்சம் வைப்பு நிதி வழங்கினார். 

அதன் மூலம் மாதந்தோறும் ரூ6 ஆயிரம் கிடைத்து வருகிறது. எனினும் அந்த தொகை மருத்துவ செலவுக்கு போதுமானதாக இல்லை. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பரவை முனியம்மாவின் உடல் நிலை மோசமடைந்தது. மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இதயம், நுரையீரலிலும் நீர்கட்டி இருப்பதும் தெரியவந்தது. 

தொடர்ந்து ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறுமாறு டாக்டர்கள் கூறினர். ஆனால் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் பரவை முனியம்மாவை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டதாக மகள்கள் தெரிவித்தனர். தற்போது நோயால் படுத்த படுக்கையாக கிடக்கும் பரவை முனியம்மா காது கேட்காமலும், வாய் பேச முடியாமலும் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு அரசும், சினிமா துறையைச் சேர்ந்தவர்களும் உதவ வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com