படை வீரன்

விஜய் யேசுதாஸ், அம்ரிதா, பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் தனா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘படை வீரன்’ படத்தின் விமர்சனம். #PadaiVeeran #PadaiVeeranReview
படை வீரன்
Published on

நாயகன் விஜய் யேசுதாஸ் ஊரில் எந்த வேலைக்கும் போகாமல், நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். இவருடைய ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் ஜாதி பிரச்சனை ஏற்படுகிறது. இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பழகி வருகிறார்கள். விஜய் யேசுதாஸ் தனது உறவுக்கார பெண்ணான நாயகி அம்ரிதாவை காதலித்து வருகிறார். 

இதற்கிடையே, போலீஸ் வேலை மீது விஜய் யேசுதாஸுக்கு ஆர்வம் ஏற்படுகிறது. போலீஸ் ஆனால் நல்ல மரியாதை கிடைக்கும், சாப்பாடு, சரக்கு உள்ளிட்டவை இலவசமாக கிடைக்கும் என்ற ஆசையில் அதற்கான முயற்சியில் இறங்குகிறார்.

இதற்காக தன் உறவினரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான பாரதிராஜாவிடம் உதவி கேட்கிறார் விஜய் யேசுதாஸ். அவரும் ஒரு லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு விஜய்க்கு உதவி செய்து தேர்வில் தேர்ச்சி பெற செய்து விடுகிறார். பிறகு பயிற்சியில் மிகவும் கஷ்டப்பட்டு போலீசாகி விடுகிறார்.

ஆனால், ஊருக்கு திரும்பும் போது, அங்கு இரண்டு ஊர்களுக்கு நடுவே ஜாதி பிரச்சனை ஏற்பட்டு கலவரமாக மாறி இருக்கிறது. போலீசாக இருந்து இரண்டு ஊர் பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்கிறார் விஜய் யேசுதாஸ். இறுதியில் ஜாதி பிரச்சினை தீர்ந்ததா? விஜய் யேசுதாஸும் அம்ரிதாவும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் விஜய் யேசுதாஸ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிராமத்து இளைஞனாக ஊர் சுற்றுவது, குடித்து விட்டு சேட்டை செய்வது என்று முதல் பாதியில் கலகலப்பாகவும், இரண்டாம் பாதியில் பொறுப்புள்ள போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார் விஜய் யேசுதாஸ். நாயகி அம்ரிதா துணிச்சலான பெண்ணாக நடித்து மனதில் நிற்கிறார். காதல் காட்சியில் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். 

எக்ஸ் மிலிட்ரி மேனாக வரும் பாரதிராஜா, தனக்கே உரிய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். செல்பி எடுக்கும் காட்சி, வசனம் பேசும் காட்சி ஆகியவை ரசிக்க வைக்கிறது. சிங்கம் புலி, மனோஜ் குமார் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

இரண்டு ஊருக்குள் நடக்கும் ஜாதி பிரச்சனையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தனா. இதுபோன்ற கதைகள் பல வெளியானாலும், இதில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார் இயக்குனர். திரைக்கதை வலுவில்லாமல் இருந்தாலும், ஒரு சில காட்சிகள் சுவாரஸ்யமாக இருப்பதால் படத்தை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

படத்திற்கு பெரிய பலம் கார்த்திக் ராஜாவின் இசை. இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. அதுபோல் பின்னணி இசையையும் கதையின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. ராஜா வேல் மோகனின் ஒளிப்பதிவும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘படை வீரன்’ வீரம் குறைவு.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com