

அந்த கொலையை நேரில் பார்த்ததால் மோகன் குமாரின் மகள் பதற்றமடைய அங்கிருந்து சென்று விடுகின்றனர். அதேநேரத்தில் அந்த கொலையை மோகன் குமாரின் மகன் வீடியோ எடுத்துவிடுகிறான். இதனை பார்த்த அந்த ரவுடிகள் அவர்களை பின்தொடர்ந்து வந்து மோகன்குமார், அவரது பெற்றோர், மனைவியான நாயகி ஷ்ரியா ஸ்ரீ என அனைவரையும் கொலை செய்துவிடுகின்றனர். இதில்மோகன் குமார் மட்டும் உயிர்பிழைத்து விடுகிறார்.
அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மோகன் குமார் மீது பற்று கொண்ட அவரது மாணவர்கள் இதற்கு காரணமானவர்களை கொலை செய்ய துடிக்கின்றனர். ஆனால் சட்டம் அதனை பார்த்துக் கொள்ளும் என்று மோகன் குமார் தனது மாணவர்களுக்கு அறிவுரை கூறுகிறார். இந்நிலையில், அவரது குழந்தைகளை தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி, அவரை திருமணம் செய்ய சொல்லி மற்றொரு நாயகியான சத்ய கலா கூற, மாணவியாக பார்த்த உன்னை மனைவியாக பார்க்க முடியாது என்று மறுத்து விடுகிறார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கொலையாளிகள் 4 பேரும் வெளியே வந்து மற்றுமொரு பெண்ணை கொலை செய்கின்றனர். இதனால் கோபத்தின் உச்சிக்கு செல்லும் மோகன் குமார் அவர்களை பழிவாங்கத் துடிக்கிறார். அப்போது தான் அவர்களுக்கு பின்னணியில் ஒருவர் அவர்களை ஆட்டி வைப்பது தெரிய வருகிறது.
கடைசியில் மோகன் குமார் தனது குடும்பத்தை அழித்தவர்களை பழிவாங்கினாரா? ரவுடிகளுக்கு பின்னணியில் இருக்கும் நபரை கண்டுபிடித்தாரா? அவர்களை பழிவாங்கினாரா? தனது மாணவியை மணந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
மோகன் குமார் ஒரு ஒழுக்கமான நபராக, பொறுப்பான ஆசிரியராக, மாணவர்களுக்கு முன்மாதிரியாக சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல் அவரது குழந்தைகளுக்கு ஒரு பாசமான தகப்பனாக வந்து செல்கிறார். அவரது மனைவியாக வரும் ஸ்ரேயா ஸ்ரீ ஒரு குடும்ப பெண்ணாக கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். குழந்தை நட்சத்திரங்களான பரத், ஷிவாணியும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
பகவதி பாலா இயக்கம் மட்டுமின்றி ஒளிப்பதிவு, நடிப்பு என அனைத்திலும் ஒரு ரவுண்டு வந்து செல்கிறார். வில்லத்தனத்தில் மிரட்ட முயற்சி செய்திருக்கிறார். ஒரு ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும். ஆசிரியரின் குணாதிசியம் என்ன, மாணவர்களை எப்படி நடத்த வேண்டும் என ஒரு பாடத்தை எடுக்க முயற்சித்திருக்கிறார்.
கே.ராஜ் பாஸ்கரின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. பகவதி பாலாவின் ஒளிப்பதிவும் சிறப்பு தான்.
மொத்தத்தில் `நெறி' ஆசிரியரின் குறி.