

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார். இவரது மனைவி பர்வதம்மா 77 வயதாகும் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஒரு வாரத்திற்கு முன்பு பெங்களூர் எம்.எஸ். ராமையா நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிறுநீரக கோளாறு, மூச்சுத் திணறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சமீபத்தில் அவர் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றார். இதில் அவருக்கு புற்றுநோய் குணம் அடைந்த நிலையில் கல்லீரல், கணையம், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டது.
அவரது உடல் நிலை மோசம் அடைந்ததைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். உயிர்காக்கும் உபகரணங்களால் செயற்கை சுவாசம், டயாலிசிஸ் போன்றவை அளிக்கப்பட்டு வருகிறது.
பர்வதம்மா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் அவர் அபாய கட்டத்தில் இருப்பதாகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
பர்வதம்மாவின் மகனும் நடிகருமான சிவராஜ்குமார், ராஜ்குமாரின் சகோதரி நாகம்மா ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தனர்.
பர்வதம்மாவின் கணவர் நடிகர் ராஜ்குமார் 2000-வது ஆண்டில் சந்தன கடத்தல் வீரப்பனால் காட்டுக்குள் கடத்திச் செல்லப்பட்டார். 100 நாட்களுக்கு பின் பெரும் தொகை கொடுத்து மீட்கப்பட்டார். 2006-ம் ஆண்டு ராஜ்குமார் மரணம் அடைந்தார்.
அதன் பிறகு பர்வதம்மா தனது சினிமா தயாரிப்பு நிறுவனத்தை கவனித்துக் கொண்டார். 80-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார்.
பர்வதம்மா ராஜ்குமாருக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகன் சிவராஜ்குமார் கன்னட பட உலகில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் பங்காரப்பாவின் மகளை திருமணம் செய்தார்.