

கிராமங்களை நோக்கிய தமிழர்களுக்கான எனது பயணம் தொடங்கிவிட்டது என்று நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஒரு வார இதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறி இருப்பதாவது:-
ஆதாரமாக இருந்த விவசாயம், லாபமற்ற தொழில் என்று அடுத்தடுத்த தலை முறையால் கைவிடப்பட்டதால் ஆதரவின்றிக் கிடக்கிறது. உலகுக்கு உழவைக் கற்றுக் கொடுத்த மூத்த குடி, கையேந்தி நிற்க வேண்டிய சூழல்.
விவசாயம், அவற்றின் உபதொழில்கள்.. எண்ணற்றவை உள்ளன. ஆனால், அவை அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படாமலேயே முழுமையாகக் கற்பிக்கப் படாமலேயே நாட்டு மருத்துவம் போல் அழிந்து வருகிறது.
இதுதான் கிராமப்புறங்களில் இன்றைய விவசாயத்தின், விவசாயிகளின் நிலை. ஊக்கப்படுத்த வேண்டிய வேளாண்மைத் துறையோ, அதிகாரிகளை முடுக்கி விட்டு, ‘இத்தனை லட்சம் ஹெக்டேர் சம்பா சாகுபடி...’, ‘வறட்சி, வெள்ள நிவாரணம் இத்தனை கோடி’ என்று ஆவணங்களில் மட்டுமே ஆட்சி செய்து கொண்டு இருக்கின்றன.
தன்னிடம் உள்ள உழவுக்குத் தேவையான கருவிகளைக் கழட்டிப் போட்டுக் காயலான் கடையாக்கி, இப்படி ஒரு துறை இருக்கிறதா? என்று கேள்வி கேட்கும் வகையில் வைத்துள்ளது வேளாண்மைப் பொறியியல் துறை.
இன்னொரு புறம் மக்கள் இடம் பெயராமல் இருக்கக் கிராமப்புறக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய அரசு, பொதுக்கழிப்பிடம், சமுதாய நலக்கூடம், நூலகம், ரேஷன் கடை... என்று டெண்டருக்காகவே கட்டிடங்களைக் கட்டிக் கொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் காரை பெயர்ந்து அரசின் லட்சணங்களை, அலட்சியங்களைப் பறைசாற்றிக் கொண்டு நிற்கின்றன.
ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பொதுக் கழிப்பிடங்களைப் பெரிய பெரிய பூட்டு போட்டுப் பூட்டி வைத்திருப்பதில் உள்ள அரசியல் என்ன என்பதுதான் என் மிகப்பெரிய சந்தேகம். பொதுவான இடத்தில் உள்ள கழிப்பிடஙக்ளைப் பயன்படுத்த மக்கள் சங்கோஜப்படுகிறார்கள் என்றால், ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியாகக் கழிப்பிடம் கட்ட மானியம் வழங்கி ஊக்கப்படுத்தலாமே?
அப்படி மானியங்கள் மூலம் அனைத்து வீடுகளிலும் ஏற்கனவே கழிப்பிடங்கள் இருந்தால் பிறகெதற்குப் பூட்டிய பொதுக்கழிப்பிடங்கள்?
அரசின் கல்வித் துறையோ, தான் நடத்தும் கிராமப்புறப் பள்ளி, கல்லூரிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் போட்டிபோடுகின்றன. கட்டடங்களும், ஆசிரியர்களும் மாணவர்களை எதிர்நோக்கி அநாதையாகக் காத்துநிற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் புரிகிறது.
இருக்கும் கொஞ்சநஞ்ச மாணவர்களையும் ‘இதற்கு என்ன அர்த்தம், இதைப் படிப்பதால் என்ன பயன்’ என்று சொல்லாமலேயே ‘(ஏ பிளஸ் பி) 2 பார்முலா சொல்லிக்கொடுத்துத் தலைதெறிக்க ஓட வைக்கிறார்கள். ஆமாம், இன்றைய மாணவர்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லித் தந்தால் அது அவனின் வாழ்க்கைக்கு எந்தளவுக்குப் பயன்பெறும் என்று சொன்னாலொழிய மற்றவை அவனுக்குத் தேவையற்றவையே.
இந்தத் தொழில்நுட்ப யுகத்தில், செயல்முறை கற்றல் இல்லை என்றால், அந்தந்தந்த வருடப் பாடத்தை மனனம் செய்து, அந்தந்த வருடம் தேர்வில் தேறி, வருடாவருடம் வாழ்வில் தோற்பான். வெற்றிக்கான வாழ்க்கைக் கல்வியை என் கிராமத்தானுக்கு, என் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு எப்போது கற்பிக்கப்போகிறோம்?
போதாததற்குப் பல மாணவர்களுக்கு, என் விவசாயிகளுக்கு மிகப்பெரிய எதிரியாக நிற்பது சாதி. தேர்தல் பாதைப் பயனுக்காக அதைப் பாதுகாத்து வேறு வருகிறார்கள். அதனால் சாதி மறக்க, தொழில் கற்க, தன் திறமையை உலகறிய வைக்க... பெரு நகரம் நோக்கி இடம் பெயர வேண்டிய நெருக்கடி நம் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு.
அப்படி இடம் பெயரும் நாம், மந்தைபோல் பெரும் ஜனத்திரளில் மூச்சுமுட்டப் பயணிக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாகக் கிராமம் மறக்கிறோம்.
நம்முடைய இந்த மறதி ஆள்பவர்களுக்கும் வசதி யாகிவிட, அவர்களும் தாங்கள் பயனுற கிராமம், விவசாயத்துக்கான திட்டங்களைப் போட்டுவிட்டு அவற்றைச் செயல்படுத்த வசதியாய் மறக்கின்றனர். ஊழலில் திளைக்கின்றனர். அரசியலே தீங்கு என இளைய சமுதாயத்தாரை எண்ண வைக்கின்றனர். கூடவே, நம் ஒற்றுமையில் வேற்றுமையை ஏற்படுத்த வேறு முனைகின்றனர்.
இப்படி, அரை நூற்றாண்டுக்கான கேள்விகளைக் கேட்டுவிட்டு நான் ஓய்ந்து போவேன் என்று நினைத்தார்கள். இவர்களை நானறிவேன் என்பதால், என் கேள்விகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கத் தொடங்கி விட்டேன்.
அதன் முதல்படிதான் என் அமெரிக்கப் பயணம். புலம்பெயர்ந்த தொழில் முனைவோருடன் கலந்துரையாடல், அவர்களின் அறிவை, தொழில் நுட்பத்தைத் தமிழகத்தில் முதலீடு செய்ய வலியுறுத்தல், ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் உரை... என இந்தப் பயணத்தை என் கிராமங்களை நோக்கியதாகவே அமைத்துக் கொண்டேன்.
கலிபோர்னியா மாகாணம், சனிவேலியில் நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துக் கொள்ளும் தொழில்நுட்பமான ப்ளூம் பாக்ஸைக் கண்டறிந்த தமிழர் டாக்டர் கே.ஆர்.ஸ்ரீதரைச் சந்தித்தேன். ஸ்ரீதர், அரிசோனா பல்கலைக்கழகத்தின் விண்வெளி தொழில்நுட்ப ஆய்வுக் கூடத்தின் தலைவராக இருந்து, மார்ஸ் ஆக்ஸிஜன் எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தில் சுத்தமான ஆக்ஸிஜன் தயாரிக்கும் திட்டத்துக்குத் தலைமை தாங்கி, அதற்கான பிரத்யேகக் கூடமும் உருவாக்கியவர்.
நாசா, மார்ஸ்-2011 திட்டத்தைக் கைவிட்டதும், இவர் ஆக்ஸிஜனையும் ஹைட்ரஜனையும் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதில் ஈடுபட்டார். இதுவே ப்ளூம் எனர்ஜி உருவாகக் காரணம்.
அந்த ப்ளூம் பாக்ஸ் தொழில்நுட்பத்தைத் தமிழகத்தில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்தோம். இது எதிர்காலத்துக்கான திட்டம்.
“தமிழ்நாடும் இந்த மாதிரியான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் முதன்மை நுகர்வராக மாறும் எதிர்காலத்தை என்னால் கணிக்க முடிகிறது” என்கிறார் ஸ்ரீதர். இதே போல் பேராசிரியர் கஸ்தூரி ரங்கனுடனான சந்திப்பும் ஆக்கபூர்வமானதாக அமைந்திருந்தது.
மாவட்டம் தோறும் ஒரு கிராமம் தத்தெடுப்பது, ஆகப்பெரும் லாபம் தரக்கூடிய விவசாயம், அந்தச் சூழலை மாசுபடுத்தாத, அதையொட்டிய தொழிற்சாலைகள்... என்று கிராமத்தை வளர்த்தெடுக்கும் என் எண்ணத்தையும் அதை நோக்கிய என் அரசியல் பயணத்தையும் அறிந்த புலம்பெயர்ந்த நண்பர்கள், அதற்குப் பல வகைகளிலும் உதவிக்கரம் நீட்டுவோம் என்று உறுதியளித்துள்ளனர்.
அதில் ஒரு நண்பர் “உலக நாயகன், உள்ளூர் நாயகனாகிறார்” என்றார். “அந்த உள்ளூர் நாயகர்களால்தான் நான் உலக நாயகனாக அறியப்படுகிறேன்” என்றேன்.
நன்றாக யோசித்துப் பாருங்கள், உழவின்றி உலகம் உண்டா? உழவனின்றி உழவு உண்டா? ஆனால், மணலைத் தோண்டியெடுத்த ஆற்றுக்குள், பொறியியல் கல்லூரி கட்ட தோண்டிய கடைக்கால் குழிகளுக்குள், ரியல் எஸ்டேட், ப்ளாட் கற்கள் புதைக்கத் தோண்டிய பள்ளங்களுக்குள்... உழவையும் உழவனையும் போட்டுப் புதைக்க முயன்று கொண்டிருக்கிறோம்.
இந்த அரசியல்வாதிகளும் கற்றுத் தேர்ந்த அதிகாரிகளும் நினைத்தால் நம் பாரம்பரியத்தையும் இன்றைய தொழில் நுட்பத்தையும் இணைத்துப் பிணைத்து அடுத்தகட்ட வளர்ச்சியைத் சாத்தியப்படுத்தலாம். மக்கள் ஆசையாசையாய் வாழ விரும்பும் பூலோகச் சொர்க்கங்களாகக் கிராமங்களைத் தரம் உயர்த்தலாம்.
“அந்தக் கிராமத்திலா, அங்க பிளாட் கிடைப்பதெல்லாம் கஷ்டம்பா” என்று பேசும் வகையில் அந்த மண்ணையும், மனிதர்களையும் விலை மதிப்பில்லாதவர்களாக உயர்த்தலாம்.
ஆம், அதை நோக்கிய தமிழகத்துக்கான, தமிழர்களுக்கான என் பயணம் தொடங்கிவிட்டது. உழவுக்கு வந்தனை செய்யும் படை, ‘நாளை நமதே’ என்று கூறிப் புறப்படத் தயாராகிவிட்டது.
ஆர்வம் உள்ளவர்கள், நல்லுள்ளம் கொண்டவர்கள் இணைக. விருப்பமில்லாதவர்கள் எங்களுக்கு வழிவிடுங்கள். நாங்கள் நிகழ்த்தி விட்டு உங்களை வந்தடைகிறோம். உங்களைப் பிறகு இணைத்துக் கொள்கிறோம். ‘நாளை நமதே’.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார். #KamalHaasan #KamalHaasanPoliticalEntry #NaalaiNamathe