கா கா கா ஆபத்தின் அறிகுறி

அசோக், மேகாஸ்ரீ, கிரண், நாசர், பேபி யுவினா ஆகியோர் நடிப்பில் மேனன் இயக்கத்தில் ஹாரர், திகில் கலந்த படமாக வெளியாகி இருக்கும் ‘கா கா கா ஆபத்தின் அறிகுறி’ படத்தின் விமர்சனம்.
கா கா கா ஆபத்தின் அறிகுறி
Published on

தமிழ்நாட்டில் தன்னுடைய சொந்த பங்களாவில் தங்குகிறார் அசோக். ஏற்கனவே இந்த பங்களாவில் வாட்ச்மேன் மற்றும் குழந்தை யுவினாவும் தங்கியிருக்கிறார்கள். பங்களாவுக்கு வந்த சில நாட்களில் அசோக்கையும், மேகாஸ்ரீயையும் ஒன்று சேரவிடாமல் ஒரு சக்தி தடுத்து வருகிறது. மேலும் மேகாஸ்ரீயை கொல்லவும் முயற்சி நடக்கிறது. இதிலிருந்து மேகாஸ்ரீ தப்பிக்கிறார்.

வேலைப்பளுவால் அசோக் கம்பெனியில் சில நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் சமையல் காரராக யோகிபாபு வேலைக்கு வருகிறார். அப்போது குழந்தை யுவினாவிடம் விளையாடும் யோகிபாபு, யுவினாவிற்குள் ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதை அறிகிறார். ஆனால், வெளியே சொல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்.

இந்நிலையில், மேகாஸ்ரீயை யாரோ கொல்ல முயற்சி செய்வதை நண்பர் கிரணிடம் சொல்கிறார். இதனால், அவருடையை அறையை சுற்றி கேமரா பொருத்துகிறார். அதில் குழந்தை யுவினா, மேகாஸ்ரீயை கொலை செய்ய முயற்சிப்பதை தெரிந்துக் கொள்கிறார்.

இறுதியில், குழந்தை யுவினா நாயகி மேகாஸ்ரீயை கொல்ல முயற்சி செய்வது ஏன்? குழந்தைக்குள் இருக்கும் அமானுஷய சக்தி யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அசோக், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக வரும் மேகாஸ்ரீ பேய்க்கு பயப்படுவது, நாயகனுடன் டூயட் ஆடுவது என தன்னால் முடிந்த வரை நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். நண்பராக வரும் கிரணுக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம். பொறுப்பை உணர்ந்து அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். குழந்தை யுவினாவின் நடிப்பு படத்திற்கு பலம். குறிப்பாக, அமானுஷ்ய சக்தி புகுந்தவுடன் இவருடைய நடிப்பு ரசிக்க வைக்கிறது. யோகி பாபுவின் காமெடியும் படத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.

பேய் மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் மேனன். வழக்கமாக பேய் படங்கள் என்றால் ஒரு பங்களாவை சுற்றிய கதை இருக்கும். அதுபோல் இப்படமும் ஒரு பங்களாவை சுற்றியே திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. சில லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம். சுவாரஸ்யமான காட்சிகள் இன்னும் தரமாக இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

அம்ரித் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். சரவணன் நட்ராஜனின் ஒளிப்பதிவு பெரிதாக எடுபடவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com