

சினிமா இயக்குனரும் நடிகருமான சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில் மரணத்திற்கு காரணம் பைனாசியர் அன்பு செழியன் என கூறி இருந்தார். இதனையடுத்து, அன்புசெழியன் மீது கந்துவட்டி, தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது அன்புசெழியன் மீதான வழக்கு மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைமறைவாக இருக்கும் அன்பு செழியன் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இறந்த அசோக் குமாருக்கும் நான் கொடுத்த கடன் தொகைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சசிகுமார்தான் என்னிடமிருந்து பணம் வாங்கினார். சசிகுமாரின் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நான் கடனாக அளித்திருந்த பணத்தை திரும்ப கேட்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக நான் அதிக வட்டி கேட்டு மிரட்டியதாக சசிகுமார் என்மீது போலீசில் பொய் புகார் அளித்துள்ளார்.
எனவே, என் மீதான புகாரின் பேரில் போலீசார் கிரிமினல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என தனது மனுவில் அன்பு செழியன் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவின்மீது இன்று விசாரணை நடத்திய சென்னை ஐகோர்ட் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், பைனான்சியர் அன்பு செழியன் மீதான கிரிமினல் நடவடிக்கைக்கு வரும் ஜனவரி மாதம் 29-ம் தேதிவரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.