ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் ஜி.வி.பிரகாஷ்

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிரௌட் பண்ட் என்ற முறையில் நிதி திரட்டுகிறார் இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ்.
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் ஜி.வி.பிரகாஷ்
Published on

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட ஐநூறு மீனவர்கள் மற்றும் விவசாய மக்களுக்கு உதவுவதற்காக முதன் முதலில் கிரௌட் பண்ட் என்ற முறையில் நிதி திரட்டப்படுகிறது. இதற்கான முயற்சியை இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் தொடங்கி வைத்தார். 

எதுதர்மா (Edudharma) என்ற பெயரில் இயங்கும் வலைதள முகவரி மூலமாக இந்த நிதி திரட்டுப்பட்டு வருகிறது. இது குறித்து ஜி.வி.பிரகாஷ் குமாரின் நண்பரும் சமூக சேவகருமான குணசேகரன் பேசும் போது, ‘தமிழகத்தின் தென் பகுதியை அண்மையில் வீசிய ஒக்கி புயலால் தமிழகத்தின் தென்கடலோரப்பகுதிகள் முழுவதும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. 

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களும், விவசாயப் பெருமக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவுவதற்காக உடனடியாக நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் களத்தில் இறங்கினார். அப்போது குடும்ப உறுப்பினர்களை முழுவதுமாக இழந்து தனியாளாக ஆதரவற்று நின்ற சின்னத்துறையைச் சேர்ந்த செல்வராணி என்ற பெண்மணிக்கு தன்னாலான உதவிகளை செய்தார்.

அப்போது அங்குள்ளவர்கள் எங்களுக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் ஏதேனும் உதவி செய்யமாட்டாரா? என ஏக்கத்துடன் கேட்டனர். அதற்காகவும், கல்வி மற்றும் உடல் நலம் குறித்த திட்டங்களுக்காகவும் அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த தகவலை எங்களுடைய உறுப்பினர்கள் மூலம் சேகரித்து, அதில் முதலில் ஐநூறு பேருக்கு கிரௌட் பண்ட் என்ற உத்தி மூலம் நிதி திரட்டி ஆதரிக்க எண்ணினோம். இந்த திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டதுடன், தன்னுடைய பங்களிப்பாக ஒரு சிறிய தொகையைக்  கொடுத்து இந்த கிரௌட் பண்ட் நிதி திரட்டும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் ஜி.வி.பிரகாஷ்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மளிகை சாமான்கள் வாங்குவதற்காக மாதத்தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்குவது என்று தொகை நிர்ணயித்து பதினைந்து லட்ச ரூபாயை இந்த கிரௌட் பண்ட் மூலம் திரட்ட திட்டமிட்டு தொடங்கியிருக்கிறோம். நிதி உதவி அளிக்க விரும்புபவர்கள் இந்த இணையப்பக்கத்தினை தொடர்பு கொண்டு அளிக்கலாம்.’ என்றார்.

நடிகர் ஜி.வி.பிரகாஷ் சமூக அக்கறையுடன் இதற்கு முன் பல நல்ல காரியங்கள் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com