

எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ் பீதா இயக்குநராக அறிமுகமாகும் படம் `வஞ்சகர் உலகம்'.
காதல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் பல புதுமுக நடிகர்களோடு, சில அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடித்துள்ளனர்.
படம் குறித்து இயக்குனர் மனோஜ் பீதா பேசுகையில், ''இது ஒரு கேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் திரில்லர் படம். இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எனது நண்பர் விநாயக் தான் இப்படத்தின் கதையாசிரியர். `வஞ்சகர் உலகம்' படத்தின் கதை மற்றும் திரைக்கதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முற்றிலும் ஒரு புது அனுபவமாக நிச்சயம் இருக்கும். படத்தின் ஒவ்வொரு நடிகரும் தனது கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளனர். குறிப்பாக குரு சோமசுந்தரத்தின் நடிப்பாற்றலை கண்டு வியந்தேன்.
அவர் இந்த படத்தில் ஒரு கேங்ஸ்டர் வேடத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் அவர் கையாண்டு அசத்திய விதம் நான் அவரிடம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு பிரமாதமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட 5-6 நிமிட கட்சியை ஒரே டேக்கில் ஓகே செய்து எல்லோரையும் மிரளவைத்தார். அவரது அபார நடிப்பாற்றலால் கதையில் சில மாறுதல்களை செய்ய வேண்டியிருந்தது.
மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த ராட்ரிகோ தான் இப்படத்தில் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். அவரது ஒளிப்பதிவு நிச்சயம் பேசப்படும். நடிகர் விசாகன் வணங்காமுடியின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் இப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக நிச்சயமாக இருக்கும். எனக்கு மிகவும் திருப்தியும் சந்தோஷமும் அளிக்கும் வகையில் இப்படம் வந்துள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்கி வேகமாக நடந்து வருகின்றன. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.
மஞ்சுளா பீதா தயாரித்துள்ள இப்படத்தில், புதுமுகம் சிபி நாயகனாகவும், அனிஷா ஆம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ். இசையில், ஆண்டனியின் படத்தொகுப்பில், ஏ.ராஜேஷின் கலை இயக்கத்தில் உருவாகி இருக்கிறது.