சினிமா பைனான்சியர் போத்ரா குண்டர் சட்டத்தில் கைது

பிரபல சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சினிமா பைனான்சியர் போத்ரா குண்டர் சட்டத்தில் கைது
Published on

பிரபல சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா கந்துவட்டி புகார்களில் ஏற்கனவே 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டார். அவரது மகன்கள் ககன்போத்ரா, சந்தீப் போத்ரா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை தியாகராயநகர் ஓட்டல் அதிபர் செந்தில்கணபதி மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.

இந்தநிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த் நாகர் என்ற டிராவல்ஸ் ஏஜெண்டு போத்ரா மீதும், அவரது மகன்கள் மீதும் புகார் மனு ஒன்றை கொடுத்தார். ரூ.5 லட்சம் கடனுக்காக ரூ.2¾ கோடி கேட்டு மிரட்டியதாக அந்த புகார் மனுவில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகுடிஸ்வரி போத்ரா மீதும், அவரது மகன்கள் மீதும் 3-வது வழக்கை பதிவு செய்தார். சென்னை எழும்பூரைச் சேர்ந்த வைர நகை வியாபாரி பகன்சந்த் பண்டாரி கொடுத்த புகாரில் 4-வது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

நேற்று 3-வது வழக்கில் போத்ரா மகன்கள் இருவரும் கைது செய்யப்பட்டார்கள். கண் நோயால் போத்ரா அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரை போலீசார் சென்னை எழும்பூரில் உள்ள கண் மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சைக்குப்பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதால் போத்ராவை 3-வது வழக்கில் கைது செய்யவில்லை. இந்த நிலையில், போத்ராவை குண்டர் சட்டத்தின் கீழ் 1 ஆண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்தார்.

சினிமா பைனான்சியர் போத்ரா மீது பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்மீது முதலில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போத்ரா நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் கஸ்தூரி ராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மீது புகார் மனுக்களை கொடுத்து வந்தார்.

இந்தநிலையில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் துணிச்சலாக நடவடிக்கை எடுத்து போத்ராவை கைது செய்ததோடு, தற்போது குண்டர் சட்டத்திலும் 1 ஆண்டு சிறையில் தள்ளி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமிஷனரின் துணிச்சலான இந்த அதிரடி நடவடிக்கை சென்னையில் செயல்படும் கந்துவட்டி கும்பலை கலக்கம் அடையச் செய்துள்ளது. கந்துவட்டி கும்பல் மீது இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com