'1947: Brexit India' ஆவணப்படத்தை இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்-சசி தரூர் வலியுறுத்தல்

"சர்வதேச இந்திய திரைப்பட விழா 2023-இல் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்ட இந்த ஆவணப்படம், விரைவில் முன்னணி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது"
Youth must watch the documentary '1947: Brexit India'
Published on

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்றதும், நாட்டுப் பிரிவினை ஏற்பட்டதுமான வரலாற்றை பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் கோணத்தில் அலசும் "1947: Brexit India" ஆவணப்படத்தை Gen Z மற்றும் Gen Alpha தலைமுறையினர் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று எம்.பி.சசிதரூர் வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி சாணக்யபுரியில் நடைபெற்ற சிறப்பு திரையிடலில் பேசிய அவர், இந்திய சுதந்திரத்தின் பின்னணியையும், பிரிட்டிஷ் ஆட்சியின் உண்மையான தாக்கத்தையும் புரிந்துகொள்ள இந்த ஆவணப்படம் இளைஞர்களுக்கு உதவும் என்றார். இந்நிகழ்வில் தூதர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் ஊடகத் துறையினர் பங்கேற்றனர்.

டாக்டர் ஸ்வர்ண்ஜித் சிங் தயாரித்துள்ள இந்த ஆவணப்படத்தை சஞ்சீவன் லால் இயக்கியுள்ளார். பிரபல நடிகர் போமன் இரானி இதற்கு குரல் கொடுத்துள்ளார். எழுத்தாளர் ஷமா ஜைதி திரைக்கதை எழுதியுள்ளார். சுமார் 338 ஆண்டுகள் இந்தியாவில் நீடித்த பிரிட்டிஷ் ஆட்சியின் வரலாறு, பொருளாதார சுரண்டல், உலக அரசியல் மாற்றங்கள் மற்றும் இந்தியப் பிரிவினைக்கு வழிவகுத்த காரணிகள் ஆகியவை இந்தப் படத்தில் விரிவாக ஆராயப்படுகின்றன. ஒரு தசாப்தத்திற்கும் மேலான ஆய்வுகள், அரிய ஆவணங்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகள் இதில் இடம்பெற்றுள்ளன.

சசி தரூருடன் வரலாற்றாசிரியர் வில்லியம் டால்ரிம்பிள், அரசியல் ஆய்வாளர் டாக்டர் இஷ்தியாக் அகமது, முன்னாள் கடற்படை அதிகாரி உதய் பாஸ்கர் உள்ளிட்ட பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். “வரலாறு என்பது கடந்த காலத்தைப் பற்றியது மட்டுமல்ல; அது நிகழ்காலத்தையும் வடிவமைக்கிறது. இந்தியா மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியின் நீண்ட உறவை சிந்தனையுடன் ஆய்வு செய்யும் இந்த முயற்சியில் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி,” என்று சசி தரூர் தெரிவித்தார்.

சர்வதேச இந்திய திரைப்பட விழா 2023-இல் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்ட இந்த ஆவணப்படம், விரைவில் முன்னணி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்திய சுதந்திரம் மற்றும் நாட்டுப் பிரிவினையை அரசியல் பார்வையைத் தாண்டி பொருளாதார மற்றும் வரலாற்றுப் பின்னணியுடன் புரிந்துகொள்ள உதவும் படைப்பாக இது கருதப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com