இசை பயணத்தில் நான் சென்று சேரும் இடம் இளையராஜாவின் பாதங்களே- மிஷ்கின்

முதன்முறையாக இயக்குனர் மிஷ்கின் இசையமைத்துள்ள திரைப்படம் 'டெவில்'.இப்படத்தை இயக்குனர் ஆதித்யா இயக்கியுள்ளார்.
இசை பயணத்தில் நான் சென்று சேரும் இடம் இளையராஜாவின் பாதங்களே- மிஷ்கின்
Published on

சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டெவில்'. இந்த படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குனர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது.

இதில் இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது, "எல்லாக் கதைகளும் ஒரே கதைகள் தான், "டெவில்" படத்தின் கதையும்  அதே தான். ஒரு அமைதியான வீட்டிற்குள் கருப்பு உள்ளே வரும். வீடு சின்னாபின்னமாகி சிதிலம் அடையும், மீண்டும் அது புத்துயிர் பெற்று துளிர்க்கும்.  அன்னா கரீனா தொடங்கி எல்லாவற்றிலும் கதை இதுதான்.  நான் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவன் அல்ல;  ஆனால் பைபிளை பலமுறை படித்திருக்கிறேன். இப்பொழுதும் இயேசு கிறிஸ்து என் பின்னால் நிற்பதைப் போல் உணர்கிறேன். நானும் சிலுவையில் தொங்குபவன் தான். இப்படத்தில் சில பாடல்களை முயற்சித்து இருக்கிறேன்.

ஒரு எட்டு வயதாக இருக்கும் போது என் தந்தையின் தோள்களில் அமர்ந்து சவாரி செல்லும் போது, 'அன்னகிளியே உன்னத் தேடுதே…' பாடலைக் கேட்டு என் அப்பனின் தலைமுடியைப்  பற்றி இழுத்து நிறுத்தி அப்பாடலைக் கேட்டேன். அன்று முதல் இளையராஜா எனக்கு குருநாதர் தான். பின்னர் ஏன் இசையமைக்க வந்தாய் என்று கேட்கிறீர்களா..? அவருடன் சண்டை போட்டுவிட்டேன்.. எனக்கு கொஞ்சம் கோபம் அதிகமாக வரும். மீண்டும் அவரிடம் போய் நிற்க முடியாது.  மேலும் மிகவும் போர் அடிக்கிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதனால் தான் இசையமைக்க முடிவு செய்தேன். 

இந்த இசை பயணத்தின் மூலம்  நான் எந்த இடத்திற்கும் சென்று சேர விரும்பவில்லை. அப்படி நான் சென்று சேரும் இடம் என்று ஒன்று இருக்குமானால் அது  இளையராஜாவின் காலடிகள் தான். இந்த உலகின் மிகப்பெரும் இசை ஆளுமைகள் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும். அவர்கள் தான் இசையமைப்பாளர்கள். நான் அல்ல.

.சினிமாவில் சிலர் கூறுவார்கள் அதிர்ஷ்டத்தால் ஜெயித்து விட்டான் என்று. இவர்களைப் பொறுத்தவரை சோவிகளை குலுக்கிப் போட்டால் உடனே தாயம் விழுந்துவிடும்,  பூவா தலையா என்று சுண்டினால் உடனே பூ விழுந்து விடும் என்று நினைக்கிறார்கள். வெற்றி அவ்வளவு எளிதானது அல்ல.  தன் வாழ்நாள் முழுக்க, 24 மணி நேரமும் சினிமா, சினிமா, சினிமா என்று ஓடிக் கொண்டிருக்கும் மகத்தான இயக்குனர் அல்ல, மகத்தான கலைஞன் அவன். அவன் தான் என் நண்பன் வெற்றிமாறன். அவனுக்கு கிடைத்த வெற்றிக்கு முழுமுதற் காரணம் அவனது அசராத உழைப்பும் ஆழ்ந்த அறிவும் தான்.

ஒரு படம் இயக்குனரின் உழைப்பும் அறிவும் வெளிப்படையாக தெரிவது போல் இருந்தால் மட்டுமே அப்படம் ஓடும்.  இல்லை என்றால் அது எப்பேர்ப்பட்ட திரைப்படமாக இருந்தாலும் ஓடாது. அதை மக்கள் நிராகரித்து விடுவார்கள். படத்தை பாருங்கள். அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தூக்கிப் போடுங்கள். அவன் மீண்டும் அதைவிட நல்ல கதையோடு உங்களைத் தேடி வருவான். படம் நன்றாக இருந்தால் கொண்டாடுங்கள், ஆதரவு தாருங்கள் என்று பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com