மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடல் தகனம் செய்யப்பட்டது

நடிகர் மாரிமுத்து நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.அவரது உடல் பசுமலைதேரிக்கு எடுத்து செல்லப்பட்டது.
மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடல் தகனம் செய்யப்பட்டது
Published on

தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள பசுமலை தேரி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (57). சீமான், மணிரத்தினம், வசந்த, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். மேலும் பல்வேறு திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர். சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த மாரிமுத்து நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு பல்வேறு திரையுலகினர் அஞ்சலி செலுத்திய நிலையில் மாலையில் அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டுவரப்பட்டது.

இன்று அதிகாலை 3மணி அளவில் தேனி மாவட்ட எல்லையை அவரது உடல் அடைந்ததும் அங்கு காத்திருந்த ஏராளமானோர் மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு அவரது கிராமமான பசுமலைதேரிக்கு எடுத்து செல்லப்பட்டது. சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் நின்று அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 6 மணி அளவில் அவரது வீட்டிற்கு முன்பு மாரிமுத்து உடல் வைக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது இல்லத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com