கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் தொடர்பா? - தமன்னா விளக்கம்

புதுச்சேரி போலீசார் கிரிப்டோ கரன்சி மோசடி கும்பலை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.தமன்னாவிடம் விசாரிக்க புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியதாக தகவல் .
கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் தொடர்பா? - தமன்னா விளக்கம்
Published on

புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., ஓய்வு பெற்ற ஊழியர் அசோகன் (வயது 70). இவர் கிரிப்டோ கரன்சியில் ஆன்லைன் ஆப் மூலம் ரூ.98 லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து கிரிப்டோ கரன்சி மோசடி கும்பலில் கோவையை சேர்ந்த நித்தீஷ்குமார் ஜெயின் (வயது36) அரவிந்த்குமார், (40) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இதுபோன்று இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோரிடம் ரூ.50 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையே கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் தொடர்புடையவர்கள் கோவை, மாமல்லபுரம், மும்பை உள்ளிட்ட இடங்களில் மோசடி செய்த பணத்தை கொண்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து, மிக பெரிய அளவில் விழாக்களை நடத்தியுள்ளனர்.

இதில் சினிமா நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்ட சில பிரபலங்களை அழைத்து வந்துள்ளது தெரியவந்தது.

இதற்காக நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது. அந்த பணம் எந்த வங்கிக்கணக்கில் இருந்து அனுப்பப்பட்டது. அவர்களுக்கும் இந்த மோசடி கும்பலுடன் தொடர்பு உள்ளதா என பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரிக்க புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த தமன்னா, "கிரிப்டோகரன்சி மோசடியுடன் என்னை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற போலியான செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று ஊடக நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com