பெண்களுக்கு காதலை விட மரியாதையை அதிகம் கொடுங்கள் - ‘விஸ்வநாத் & சன்ஸ்’ இசை வெளியீட்டு விழாவில் சூர்யா

நமது துணை மீது நாம் வைத்துள்ள அன்பும் பாசமும் ஒருபோதும் மாறக்கூடாது
‘விஸ்வநாத் & சன்ஸ்’
‘விஸ்வநாத் & சன்ஸ்’
Published on

'கருப்பு' படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் 46வது படமாக ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் உருவாகியுள்ளது.

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கிய இப்படத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா தாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் ஒரு நடுத்தர வயது விளையாட்டு வீரருக்கும், அவர் மீது ஈர்ப்பு கொள்ளும் இளம் பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாகக் கொண்ட கதைக்களத்தை கொண்டுள்ளது என டிரெய்லர் மூலம் அறிய முடிகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள சூர்யா இன்று விமான மார்க்கமாக கோவை வந்தடைந்தார்.

இந்த விழாவில் படத்தின் நாயகி மமிதா பைஜூ, படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், நடிகர் சுனில், நடிகை ராதிகா, இயக்குநர் அட்லூரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய நடிகர் சூர்யா பெண்கள், அவர்கள் மீதான காதல் மற்றும் மரியாதை குறித்து பேசியுள்ளார்.

சூர்யா பேச்சு

மேடையில் சூர்யா பேசியதாவது, "காதல் என்பது என்றும் மாறாத ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அது தாலி கட்டும் நாளில் மட்டும் உணரப்படும் ஒன்று அல்ல. ஒவ்வொரு நாளும் நாம் காதலிக்க வேண்டும்.

ஒருவருடன் 20 ஆண்டுகள் வாழ்ந்தாலும், அந்த அன்பும் காதலும் தொடர வேண்டும். உங்கள் துணை மீது எப்போதும் மரியாதையும் அன்பும் குறையாமல் இருக்க வேண்டும்.

காலப்போக்கில் ஒவ்வொருவரும் மாறுகிறார்கள். நாமும் மாறுகிறோம், நம் துணையும் மாறுவார்.

20, 25 அல்லது 30 வயதில் நமது முன்னுரிமைகள் வேறாக இருக்கும். நமது சிந்தனைகள் மாறலாம், வாழ்க்கை எந்தப் பாதையிலும் செல்லலாம். ஆனால், நமது துணை மீது நாம் வைத்துள்ள அன்பும் பாசமும் ஒருபோதும் மாறக்கூடாது."

ஒரு பெண் ஒரு நிலையை அடையக் கடந்து வரும் பாதையானது, ஒரு ஆண் கடந்து வருவதை விட மிகவும் கடினமானது.

ஒரு வீட்டைக் கவனித்துக் கொள்வதிலும், ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதிலும் பெண்கள் எவ்வளவோ விட்டுக் கொடுத்துத் தியாகங்களைச் செய்கிறார்கள்.

அவர்களின் தியாகங்களுக்கு எப்போதும் மதிப்பளியுங்கள். அந்த மரியாதையுடன் முடிந்தவரை உறுதியாக நில்லுங்கள். உண்மையில் காதலை விட மரியாதையை அதிகம் அவர்களுக்குக் காட்டுங்கள்." என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com