

ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவாகியுள்ள 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் உலகளவில் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
படத்தின் சிறப்பு திரையிடலுக்குப் பிறகு வெளிவந்துள்ள முதல் விமர்சனங்களின் அடிப்படையில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற Rotten Tomatoes இணையதளத்தில் இத்திரைப்படம் 91% நேர்மறை விமர்சன மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளது.
ஹாலிவுட் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம், அதிகாரப்பூர்வமாக திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாகவே உலகளவில் பேராதரவைப் பெற்று வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற உலகளாவிய சிறப்புத் திரையிடலுக்கு பிறகு, சமூக வலைத்தளங்களில் படத்தைப் பற்றிய நேர்மறையான கருத்துகள் குவிந்து வருகின்றன.
திரைப்பட விமர்சன வலைத்தளங்களில் ஒன்றான ரோட்டன் டொமேட்டோஸில், இத்திரைப்படம் முதலில் 93% மதிப்பெண்களுடன் கணக்கைத் தொடங்கியது. தொடர்ந்து பல முன்னணி விமர்சகர்களின் விமர்சனங்கள் வந்த பிறகு, தற்போது 91% மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
டாம் ஹோலண்ட் நடிப்பில் வெளியான ஸ்பைடர் மேன் திரைப்பட வரிசையில், இது இரண்டாவது மிக உயர்ந்த விமர்சன மதிப்பெண்களைப் பெற்ற படமாக உருவெடுத்துள்ளது. முந்தைய ஸ்பைடர் மேன் படங்களான Spider-Man: Homecoming 92%, Spider-Man: Far From Home 91%, மற்றும் Spider-Man: No Way Home 93% மதிப்பெண்களைப் பெற்றிருந்தது.
இப்படத்தில் டாம் ஹோலண்டின் நடிப்பு மிகவும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளதாக திரை விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை வெளியான ஸ்பைடர் மேன் திரைப்படங்களிலேயே இதுவே மிகச் சிறந்த படம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
படத்தின் சுவாரசியமான திரைக்கதை மாற்றங்கள் மற்றும் நடிகை சேடி சிங்கின் கதாபாத்திர வளர்ச்சி ஆகியவை ரசிகர்களுக்குப் பெரும் ஆச்சரியத்தையும் திருப்தியையும் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சிறப்பான விமர்சனங்கள் வெளியாகி வருவதால், இப்படத்திற்கான வர்த்தக எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. வட அமெரிக்காவில் மட்டும் சுமார் 4,300 திரையரங்குகளில் வெளியாகும் இத்திரைப்படம், முதல் வார இறுதியில் $260 மில்லியன் முதல் $280 மில்லியன் டாலர் வரை வசூலிக்கும் என்று 'வெரைட்டி' இதழ் கணித்துள்ளது. ரசிகர்களின் வரவேற்பு அதிகரிக்கும் பட்சத்தில், இத்தொகை $300 மில்லியன் டாலரை எட்டக்கூடும் என பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தயாரிப்பு நிறுவனமான சோனி ஆரம்பத்தில் $190 மில்லியன் முதல் $195 மில்லியன் டாலர் வரை மட்டுமே வசூலிக்கும் என்று கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது உலகளவில் இத்திரைப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பைப் பார்க்கும்போது, பாக்ஸ் ஆபீஸில் பல புதிய சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.