'சேயோன்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

‘சேயோன்’ திரைப்படத்தை அக்டோபர் மாதம் ஆயுத பூஜைக்கு அல்லது நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
'சேயோன்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது ‘சேயோன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ‘தாய் கிழவி’ திரைப்பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கி வருகிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்சே நடித்து வருகிறார். மேலும் பால சரவணன் மற்றும் அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படம் விருமாண்டி திரைப்படம் போல கருமாத்தூர் தெய்வங்களை மையமாக வைத்து மதுரையில் நடக்கும் ஆக்ஷன், நகைச்சுவையுடன் கூடிய கிராமப்புற குடும்ப பொழுது போக்கு படமாக உருவாகி வருகிறது. படம் குறித்த அறிவிப்பு வெளியானதும் மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டு இருந்தது. இருப்பினும் சில காரணங்களால் மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் ‘சேயோன்’ படத்தின் படப்பிடிப்பு மதுரையில், ஒரு பாடல் காட்சியுடன் தொடங்கியது.

இந்த நிலையில், ‘சேயோன்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

‘சேயோன்’ திரைப்படத்தை அக்டோபர் மாதம் ஆயுத பூஜைக்கு அல்லது நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com