'சார்பட்டா 2' படப்பிடிப்பு ஆகஸ்டில் தொடக்கம்: நடிகை துஷாரா விஜயன் தகவல்!

சார்பட்டா 2 திரைப்படம் கண்டிப்பாக தியேட்டர்களில் பிரம்மாண்டமாக வெளியாகும்.
Sarpatta2
Published on

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான 'சார்பட்டா பரம்பரை' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை துஷாரா விஜயன், படத்தின் ரிலீஸ் திட்டம் குறித்த மிக முக்கியமான மற்றும் சுவாரசியமான தகவல் ஒன்றை அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.

தியேட்டர் ரிலீஸ் உறுதி:

நேர்காணலில் பேசிய துஷாரா விஜயன், "சார்பட்டா பரம்பரை முதல் பாகம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால், 'சார்பட்டா 2' திரைப்படம் கண்டிப்பாக தியேட்டர்களில் பிரம்மாண்டமாக வெளியாகும்" என்பதைத் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும், பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முந்தைய பாகத்தின் ஏக்கம்:

கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக 'சார்பட்டா பரம்பரை' முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.

படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றாலும், வடசென்னையின் பாக்ஸிங் உலகத்தை தியேட்டரில் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் ரசிகர்களிடம் நீண்ட நாட்களாக இருந்தது. தற்போது இரண்டாம் பாகம் தியேட்டரில் வெளியாகும் என்ற அறிவிப்பு அந்த ஏக்கத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக அமைந்துள்ளது.

மேலும், இந்த இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாகவும், சிறப்பாகவும் இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மீண்டும் 'மாரியம்மா' அராஜகம்:

முதல் பாகத்தில் 'மாரியம்மா' என்ற துணிச்சலான பெண்ணாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்த துஷாரா, இந்த பாகத்திலும் தனது கதாபாத்திரம் இன்னும் அழுத்தமாகவும், தீவிரமாகவும் இருக்கும் என்பதை உறுதிபடுத்தியுள்ளர்.

ஆர்யாவுடனான அவரது திரைக்கூட்டணி இந்த முறையும் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சார்பட்டா - முதல் பாகம்:

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் 2021-ல் வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம், 1970-களின் வடசென்னை குத்துச்சண்டை கலாச்சாரத்தையும், சார்பட்டா - இடியாப்ப பரம்பரைகளுக்கு இடையிலான கௌரவ மோதலையும் மிக எதார்த்தமாகப் பதிவு செய்தது.

கபிலன் என்ற எளிய இளைஞன் தடைகளைத் தாண்டி எப்படி சாம்பியனாக உயர்கிறான் என்ற விறுவிறுப்பான கதைக்களம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. நடிகர்களின் மிரட்டலான உடல்மொழி, அழுத்தமான வசனங்கள் மற்றும் சந்தோஷ் நாராயணனின் அதிரடி இசையால் இத்திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகிலும் பேசப்பட்டு, மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com