

சென்னை பாலன் இல்லத்தில் நடக்கும் மாணவர்கள் போராட்டம் போலியானது என்றும், அரசியல் அஜெண்டா வைத்து நடத்துகிறார்கள் என்றும் நடிகை சனம் ஷெட்டி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டத்தில் நடிகை சனம் ஷெட்டி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இது மாணவர்கள் போராட்டம். மாணவர்களுக்கான போராட்டம். மாணவர்களை ஆதரித்து இங்கு பேச வந்துள்ளேன். இந்த மேடையை அரசியலுக்காக பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்தான் ஜோக்கர்ஸ். நான் தளபதியோட (முதலமைச்சர் விஜய்) தீவிரமான ரசிகை. நான் நேற்று ஜனநாயகன் படத்தை பார்த்துவிட்டு தான் வந்து இருக்கிறேன். (அப்போது மாணவர்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்பினர்).
உடனடியாக அவர் இது ஜனநாயகம் அல்ல. ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சுரிமை உள்ளது. இப்போது புரிகிறதா? நான் எதைப்பற்றி பேசிக்கொண்டு இருக்கிறேன் என்று தெரிகிறதா? என்றார். உடனடியாக மாணவர்கள் கோஷம் எழுப்பத் தொடங்கினர். (நடிகை சனம் ஷெட்டியிடம் இருந்து மைக் வாங்கப்பட்டது)
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் நடிகை சனம் ஷெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
மாணவர்களுக்கான போராட்டம் என்று தானே கூப்பிட்டார்கள். ஜனநாயகத்துக்காக போராடுகிறோம் என்கிறார்கள். பேசிக்கிட்டு இருக்கும்போதே வந்து மைக்கை பிடுங்கினார்களே. அதுதான் ஜனநாயகமா? நான் பொதுமக்களில் ஒருத்தியாக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இங்கு வந்துள்ளேன்.
இந்த மேடையை அரசியலாக மாற்றினால் அதற்கு நான் ஆதரவு தெரிவிக்கமாட்டேன். இவர்கள் ஜனநாயகத்துக்காக போராடவில்லை. அவர்கள் அஜெண்டா வைத்து தான் போராடுகிறார்கள். இந்த பொறிக்குள்ள விழுந்து விட வேண்டாம். பேசுவதற்கு சுதந்திரம் கொடுக்காதவர்கள் சுதந்திரத்துக்காக போராடுகிறார்களா?
போலியான போராட்டம்
இது ஒரு போலியான போராட்டம். டெல்லியில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியாது. நான் அங்கு போகவில்லை. இப்போதும் சொல்கிறேன். 100 சதவீதம் மாணவர்களுக்கு சல்யூட் அடிக்கிறேன். சோனம் வாங்சுக்கு பெரிய மரியாதை அளிக்கிறேன். அவரை காந்திக்கு நிகராக பார்க்கிறேன். மாணவர்களின் காலில் விழுந்து அவர்களுக்கு ஆதரவு அளிக்கிறேன். ஆனால், இங்கு நடக்கும் போராட்டம் போலியானது.
இவ்வாறு அவர் கூறினார்.