

பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் சல்மான் கானின் ஒல்லியான முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த ஜூலை 17 அன்று மும்பையில் உள்ள குடிசைப் புனரமைப்பு ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் சல்மான் கான் கலந்து கொண்டார்.
அங்கு அமைக்கப்பட்டிருந்த அதிநவீன தரவு சேகரிப்பு மற்றும் தகவல் சரிபார்ப்பு தொழில்நுட்ப சர்வர் அறையை அவர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.
அதில், தாடி மீசையின்றி முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், வெளிர் நிற சட்டை மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து சல்மான் கான் காட்சியளித்தார்.
வழக்கமான அவரது கட்டுமஸ்தான உடலமைப்பு இல்லாமல், அவர் மிகவும் ஒல்லியாகக் காணப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
60 வயதான சல்மான் கான் தற்போது பார்க்க 80 வயது முதியவர் போல காட்சி அளிப்பதாகவும், அவருக்கு என்ன ஆனது என்றும் பலர் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அவருக்கு ஏதேனும் நோய் பாதிப்பு உள்ளதா எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மற்றொரு தரப்பினர், "60 வயது நபர், 60 வயது நபரைப்போல இயற்கையாகக் காட்சியளிக்கிறார். இதில் தவறு எதுவும் இல்லை" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சர்ச்சை ஒருபுறமிருக்க, சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள 'மாத்ருபூமி' திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
இத்திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் 'பேட்டில் ஆஃப் கல்வான்' எனப் பெயரிடப்பட்டிருந்தது. கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்து தாக்கியதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
அபூர்வா லக்கியா இயக்கியுள்ள இந்த ஆக்ஷன் திரைப்படத்தில், சல்மான் கானுடன் இணைந்து சித்ராங்கதா சிங் மற்றும் முகேஷ் ரிஷி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.