

சென்னை:
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ள 'கங்குவா' திரைப்படம் வருகிற 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 'கங்குவா' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அர்ஜுன் லால் என்பவர் திரைத்துறையில் பலருக்கு கடன் கொடுத்துள்ளார். நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலானதாக அறிவிக்கப்பட்டார்.
பின்னர் அவர் இறந்துவிட்ட நிலையில், அவரது சொத்துகளை ஐகோர்ட்டு கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, கடன் வாங்கியவர்களிடம் வசூலிக்க நடவடிக்கை எடுத்துவருகிறார். இந்த நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அர்ஜுன் லாலிடம் பெற்ற கடனை வசூலிப்பது தொடர்பாக சொத்தாட்சியர் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார்.
இதையடுத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அர்ஜுன் லாலிடம் பெற்ற ரூ.20 கோடியை வருகிற 13-ம் தேதிக்குள் சொத்தாட்சியருக்கு செலுத்தாமல் படத்தை வெளியிடக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.