

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், மிகம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் காவியத் திரைப்படம் 'ராமாயணம்'. இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக கே.ஜி.எஃப் புகழ் யாஷ் மற்றும் அனுமனாக சன்னி தியோல் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலரை கடந்த 24ஆம் தேதி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், சர்வதேச அளவில் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததையடுத்து, டிரைலர் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் நமீத் மல்ஹோத்ரா திடீரென அறிவித்தார்.
சமீபத்தில் புதுடெல்லியில் நடந்த 'பிரதம் சங்கல்ப்' நிகழ்ச்சி மற்றும் அமெரிக்காவின் சான் டியாகோ காமிக்-கான் நிகழ்வுகளில் திரையிடப்பட்ட டிரைலரின் சில முக்கிய காட்சிகள், செல்போனில் ரகசியமாக படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன.
சுமார் 1 நிமிடம் முதல் 2 நிமிடங்கள் வரையிலான இந்த லீக் செய்யப்பட்ட வீடியோக்களில், ரன்பீர் கபூரின் ராமர் தோற்றம் மற்றும் பிரம்மாண்ட காட்சி அமைப்பு, சீதையாக நடித்துள்ள சாய் பல்லவியின் எமோஷனல் காட்சிகள், ராவணனாக வரும் நடிகர் யாஷின் கம்பீரமான தோற்றம், உயர்தர VFX மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
டிரைலர் லீக்கான தகவல் காட்டுத்தீ போல பரவியதைத் தொடர்ந்து, எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் இதுவே பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. பல மாத உழைப்பில் உருவான காட்சிகளை இப்படி திருட்டுத்தனமாக வெளியிடுவது தவறானது என்று ஒருதரப்பினர் படக்குழுவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம், ஏற்கனவே காட்சிகள் இணையத்தில் பரவிவிட்டதால், தயவுசெய்து எச்டி தரத்திலான அதிகாரப்பூர்வ டிரைலரை உடனடியாக யூடியூபில் வெளியிடுங்கள் என #RamayanaTrailerASAP என்ற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வீடியோக்கள் இணையத்தில் பரவுவதைத் தடுக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும், 'காப்பிரைட் ஸ்டிரைக்' மூலம் லீக் செய்யப்பட்ட வீடியோக்களை அகற்றும் பணிகளையும் படக்குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் 'ராமாயணம்' படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.