போட்டோகிராபர் - விமர்சனம்
போட்டோகிராபர் - விமர்சனம்(2.5 / 5)
அஷ்ரப் அந்த காட்டில் இருந்து உயிருடன் மீண்டாரா?, அவர் தேடி வந்த அரிய மரத்தை கண்டுபிடித்தாரா?, காட்டில் நடக்கும் மர்மங்களின் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதை
அரிய வகை மரம் ஒன்றை புகைப்படம் எடுப்பதற்காக மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதிக்குள் செல்லும் புகைப்படக் கலைஞரான அஷ்ரப், வழி தவறி யாரும் திரும்பி வராத ஆபத்தான காட்டுப் பகுதிக்குள் சிக்கிக் கொள்கிறார். அங்கிருந்து வெளியேற போராடும் அவர், இயற்கையின் சீற்றம், மர்மமான சம்பவங்கள் மற்றும் உளவியல் ரீதியான பல சோதனைகளை எதிர்கொள்கிறார்.
அஷ்ரப் அந்த காட்டில் இருந்து உயிருடன் மீண்டாரா?, அவர் தேடி வந்த அரிய மரத்தை கண்டுபிடித்தாரா?, காட்டில் நடக்கும் மர்மங்களின் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதை எழுதி இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் அஷ்ரப், ஒரு மனிதனின் தனிமையான உயிர் பிழைப்பு போராட்டத்தை மையமாக வைத்து வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். முதல் பாதியில் அவரது நடிப்பு சற்று செயற்கையாக தோன்றினாலும், இரண்டாம் பாதியில் கதையின் தீவிரத்தோடு ஒன்றி தனது உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஜனனி சமாதானம், குறைந்த காட்சிகளில் வந்தாலும் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான பங்களிப்பை அளித்திருக்கிறார்.
கருணாகரன், நாயகனின் நண்பராக இயல்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். உறியடி சிவா தனது கதாபாத்திரத்தை குறையில்லாமல் கையாண்டிருக்கிறார். ஆடுகளம் நரேன், அனுபவமான நடிப்பின் மூலம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.
ஒளிப்பதிவு- இசை
ஒளிப்பதிவாளர் ரயீஷ் அஹ்மத், காட்டின் இயற்கை அழகை ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார். ராஜ்குமார் சந்திரசேகரன் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
தேவையில்லாமல் நீளும் சில காட்சிகளும் படத்தின் வேகத்தை பாதிக்கின்றன. அதே நேரத்தில், இரண்டாம் பாதியில் அம்மா–மகன் பாசம், தனிமையின் உளவியல் தாக்கம் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் மூலம் கதையை சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் அஷ்ரப்.

