பரிமளா அண்ட் கோ- திரை விமர்சனம்

பரிமளா அண்ட் கோ- திரை விமர்சனம்

Published on
பரிமளா அண்ட் கோ- விமர்சனம்(3.5 / 5)

கதை

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜெயராம், ஊர்வசி தம்பதியினர் தங்களது இரண்டு மகள்களுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.

எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் இரண்டு மகள்கள், அவர்களது அன்றாட கலாட்டாக்கள் என குடும்பம் இயல்பாக நகர்கிறது.

ஆனால் மூத்த மகளுக்கு ரவுடி சாண்டி தொடர்ந்து காதல் தொல்லை கொடுக்க ஆரம்பிக்கிறார். நாளுக்கு நாள் அந்த தொல்லை அதிகரிக்க, அவரது குடும்பத்தினரும் மறைமுகமாக அழுத்தம் கொடுக்கிறார்கள்.

இந்த பிரச்சனையில் இருந்து எப்படி வெளியே வருவது என்று குடும்பமே குழப்பத்தில் இருக்கும் நேரத்தில், சாண்டி திடீரென கொலை செய்யப்படுகிறார்.

இந்த கொலை வழக்கை விசாரிக்க வரும் காவல்துறை அதிகாரி மிஷ்கின், முதல் சந்தேகத்தை ஜெயராம் குடும்பத்தின் மீது திருப்புகிறார். விசாரணை தீவிரமாவதோடு, குடும்பத்தினரே ஒருவரை ஒருவர் சந்தேகப்பட ஆரம்பிக்கிறார்கள்.

பின்னர் உறவினர்கள், நண்பர்கள் என ஒவ்வொருவரின் மீதும் சந்தேகம் திரும்புகிறது.

இறுதியில் சாண்டியை கொலை செய்தது யார்? கொலையாளியை மிஷ்கின் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

ஜெயராம் மற்றும் ஊர்வசி இருவரும் படத்தின் மிகப்பெரிய பலம். கணவன் - மனைவியாக இருவரும் அடிக்கும் கவுண்டர்கள், அவர்களது இயல்பான நடிப்பு, டைமிங் காமெடி என பல இடங்களில் சிரிப்பை அள்ளுகிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த கூட்டணியை திரையில் பார்ப்பதே ஒரு தனி சந்தோஷம்.

மிஷ்கின் போலீஸ் அதிகாரியாக வித்தியாசமான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் சாதாரணமாக தோன்றும் அவரது கதாபாத்திரம், கதையின் இறுதியில் எதிர்பாராத கவனத்தை ஈர்த்து இருக்கிறார். வழக்கமான போலீஸ் கதாபாத்திரங்களிலிருந்து விலகி, தனது தனித்துவமான பாணியில் நடித்திருக்கிறார்.

சாண்டிக்கு இந்த படம் ஒரு முக்கியமான படமாக அமைந்து இருக்கிறது. நடன இயக்குநர் என்ற அடையாளத்தை தாண்டி, வில்லத்தனமும் நகைச்சுவையும் கலந்த கதாபாத்திரத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சஞ்சனா, அனந்திகா இருவரும் இன்றைய நடுத்தர குடும்ப இளம் பெண்களை அப்படியே பிரதிபலிக்கிறார்கள். அவர்களது சண்டைகள், குறும்புகள், பேச்சு முறை எல்லாமே இயல்பாக இருக்கிறது. யோகி பாபு, ஜி.கே.எம் தமிழ்குமரன், பூர்ணிமா ரவி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

இயக்கம்

இயக்குநர் பாண்டிராஜ் பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒரு முக்கியமான பிரச்சனையை மையமாக வைத்து, அதை சோகமாக இல்லாமல் நகைச்சுவையுடன் சொல்ல முயற்சித்திருக்கிறார். அந்த முயற்சி பல இடங்களில் ரசிக்க முடிகிறது.

திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையை விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார். கிளைமாக்ஸ் பகுதியில் இயக்குநர் சொல்லும் சமூக கருத்தும், இளைஞர்களுக்கான முக்கியமான அறிவுரையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

ஒளிப்பதிவு  

ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் காட்சிகளை அழகாக பதிவு செய்திருக்கிறார்.

இசை

ஃபாக்ஸன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com