நூறு சாமி- திரை விமர்சனம்
நூறு சாமி- விமர்சனம்(3.5 / 5)
கதை
20 வயதிலேயே கணவரை இழந்த சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்குகிறார். மகன்கள் வளர்ந்து தங்களது வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், சுவாசிகாவுக்கு மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உருவாகிறது. தனது விருப்பத்தை மகன்களிடம் தெரிவிக்கும்போது, மூத்த மகன் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
ஆனால் காலப்போக்கில் தாயின் தனிமையையும், அவரது மனநிலையையும் புரிந்துகொள்ளும் மகன்கள், தாய்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். திருமண ஏற்பாடுகள் நடைபெறும் நிலையில், ஊர் மக்களின் எதிர்ப்பும் சமூகத்தின் பழமைவாத பார்வையும் பெரிய பிரச்சனையாக மாறுகிறது. இறுதியில் சுவாசிகாவின் திருமணம் நடந்ததா? சமூகத்தின் எதிர்ப்பை அவர் எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தின் மிகப்பெரிய பலமே சுவாசிகாவின் நடிப்பு. கணவனை இழந்த பெண்ணின் தனிமை, பிள்ளைகளுக்காக வாழும் தாயின் தியாகம், தனது வாழ்க்கைக்காக ஒரு முடிவு எடுக்க நினைக்கும் பெண்ணின் மனப்போராட்டம் என ஒவ்வொரு உணர்வையும் மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
பல காட்சிகளில் அவர் நடிக்கவில்லை, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். நாயகனாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனியின் நடிப்பு பெரும் அடையாளத்தை கொடுத்திருக்கிறது. வசனங்கள் மூலம் அவரது கதாபாத்திரமும் கவனம் பெறுகிறது.
மகனாக நடித்துள்ள அஜய் திஷன், ஆரம்பத்தில் தாயின் முடிவை ஏற்க மறுத்தாலும், பின்னர் அவரது உணர்வுகளை புரிந்து கொண்டு துணையாக நிற்கும் காட்சிகளில் சிறப்பாக கவனம் ஈர்க்கிறார். சக்தி, காவ்யா அனில், பாடினி குமார், கருணாஸ், லிஜோமோல் ஜோஸ், முனிஷ்காந்த் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்குநர் சசி, கணவனை இழந்த பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பார்வைகளையும், அவர்களது மறுமணத்திற்கு இன்னும் இருக்கும் தடைகளையும் மிக நேர்மையாக பதிவு செய்திருக்கிறார். எந்தவித செயற்கை நாடகத்தனமும் இல்லாமல், ஒரு பெண்ணின் உணர்வுகளையும் உரிமையையும் பேசும் விதம் பாராட்டுக்குரியது.
சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், படம் பேசும் கருத்தும் அதற்காக உருவாக்கப்பட்டுள்ள உணர்வுப்பூர்வமான காட்சிகளும் அந்த குறையை மறக்க வைக்கின்றன. குறிப்பாக கிளைமாக்ஸ் நெருங்கும் போது படம் சொல்ல வரும் விஷயம் மனதை நெகிழ வைக்கிறது. கணவனை இழந்த பெண்களின் வாழ்க்கை, அவர்களது ஆசைகள் மற்றும் சமூகத்தின் இரட்டை முகத்தை கேள்விக்குள்ளாக்கும் உணர்வுப்பூர்வமான திரைப்படம்.
இசை & ஒளிப்பதிவு
பாலாஜி ஸ்ரீராமின் இசையும், தர்ஷன் கிர்லோஷின் ஒளிப்பதிவும் கதையின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் அழகாக கடத்துகின்றன.
குறிப்பாக குடும்ப உணர்வுகள் நிறைந்த காட்சிகளில் இருவரின் பங்களிப்பும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

