

தொழிலதிபர் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான 'G.D.N' பட விளம்பர நிகழ்ச்சியின் போது, மூத்த இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாருடன் நடிகர் மாதவன் சிறப்பு நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அதில் நடிகர் விஜய், தமிழக அரசியல் சூழல் மற்றும் தனது சொந்த அரசியல் விருப்பங்கள் குறித்து மாதவன் விரிவாகப் பேசியுள்ளார்.
"தமிழகத்தில் அரசியல் சூழல் இவ்வளவு வேகமாக மாறும் என்றும், அது சாத்தியம் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது மக்களுக்கு மாற்றத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது" என்று மாதவன் குறிப்பிட்டிருந்தார். எனக்கு விஜய்யை நன்றாகத் தெரியும். என் நண்பன் விஜய் இன்று 'முதலமைச்சர் விஜய்' ஆகியிருப்பதை நான் பெருமையுடன் சொல்கிறேன் என மகிழ்ச்சி தெரிவித்தார்.
தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் சுத்தமாக இல்லை என்று கூறிய மாதவன், "மக்களுக்குச் சேவை செய்யும் எண்ணம் நமக்குள்ளேயே இருக்க வேண்டும். அதிகார ஆசை எனக்கு இல்லை. மக்களுக்குத் தலைவனாகவோ அல்லது முதலமைச்சராகவோ ஆக வேண்டும் என்ற லட்சியம் எனக்குக் கிடையாது. அந்த வகையில் நான் ஒரு சுயநலவாதி" என்று பேசினார்.
மேலும் பேசிய அவர், எனக்கு அரசியலைப் பற்றி பெரிய புரிதல் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை நான் மதிக்கிறேன். எனது 'தம்பி' படத்தில் வரும் பிரபல வசனத்தைப் போல, யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் எனது வேலையைச் சரியாகச் செய்வதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் கூறுகையில், "அரசியல் என்பது ஒரு இருமுனை கத்தி. நீங்கள் நல்லது செய்தாலும் திட்டு வாங்குவீர்கள், தவறு செய்தாலும் திட்டு வாங்குவீர்கள். நீங்கள் என்ன செய்தாலும் அதை எதிர்மறையாகப் பார்க்கும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும்" என்றார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி குறித்துப் பேசிய அவர், நான்கு வயதில் தனது மடியில் அமர்ந்திருந்த இன்பன் இன்று வளர்ந்து நிற்கும் விதத்தைப் பார்க்கும் போது பெருமையாக இருப்பதாகத் தெரிவித்தார்.
"இந்தியாவின் எடிசன்" என்று அழைக்கப்படும் கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'G.D.N' திரைப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார். இதில் மாதவனுடன் சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.