

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விஜய் சேதுபதி. கதாநாயகனாக மட்டுமின்றி, கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் மற்றும் வில்லன் பாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் தற்போது தமிழ் மற்றும் பிற மொழிகளில் பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
விஜய் சேதுபதியின் நடிப்பில் ‘டிரெயின்’, ‘ஜெயிலர்2’, ‘காட்டான்’, ‘பெக்கர்’, ‘ஸ்லாம்டாக் 33 டெம்பிள் ரோடு’, ‘பிசாசு 2’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. ‘அரசன்’, ‘பாக்கெட் நாவல்’, பாலாஜி தரணிதரனின் படம் உள்ளிட்டவை படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே, மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் நலன் குமாரசாமியுடன் மீண்டும் விஜய் சேதுபதி இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை 'ரெட் ஜெயண்ட் ஸ்டுடியோஸ்' (Red Giant Studios) தயாரிக்கவுள்ளது தகவல் வெளியாகி உள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து திரைப்படத் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையிலும், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவிலும் உருவாகவுள்ள இப்படம், விஜய் சேதுபதியின் திரைப்பயணத்திலேயே மிக அதிக பட்ஜெட்டில் தயாராகும் படங்களில் ஒன்றாக அமையவுள்ளது.
கோலிவுட்டின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான மனோஜ் பரமஹம்சாவின் சம்பளம் ரூ.2 கோடியாகும். அத்துடன், உயர்தரமான காட்சித் தரத்தை வழங்கும் வகையில் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான வெளிப்புறப் படப்பிடிப்பு உபகரணங்களும் (outdoor unit) இதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.