காஞ்சனா-டிமான்டி காலனி: லாரன்ஸ்-அஜய் ஞானமுத்து கூட்டணியில் பிரம்மாண்ட ஹாரர் படம்!

"காஞ்சனா' ஸ்டைல் மாஸ் எலிமெண்ட்டுகளும், 'டிமான்டி காலனி' ஸ்டைல் மிரட்டலான திரைக்கதையும் இணைந்து தியேட்டர்களில் ஒரு பெரிய சம்பவமாக அமையப் போவது உறுதி"
Kanchana meets Demonte Colony
Published on

தமிழ் சினிமாவின் ஹாரர்-காமெடி படங்களின் கிங் என்று அழைக்கப்படும் ராகவா லாரன்ஸ் மற்றும் பக்கா த்ரில்லர் பேய் படங்களை இயக்குவதில் கைதேர்ந்த அஜய் ஞானமுத்து ஆகிய இருவரும் ஒரு புதிய பிரம்மாண்ட பேண்டஸி ஹாரர் படத்திற்காக இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு என்று எப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதில் இரண்டு வெவ்வேறான பாதைகளில் முத்திரை பதித்தவர்கள் லாரன்ஸும், அஜய்யும். முனி', 'காஞ்சனா' வரிசைப் படங்கள் மூலம் கலகலப்பான காமெடி மற்றும் அதிரடி பேய் படங்களைக் கொடுத்து வசூல் சாதனை படைத்தவர் ராகவா லாரன்ஸ். 'டிமான்டி காலனி' சீரிஸ் மூலம் பார்ப்பவர்களை உறைய வைக்கும் வகையிலான பக்கா சீரியஸ் ஹாரர் த்ரில்லர்களைக் கொடுப்பதில் வல்லவர் அஜய் ஞானமுத்து. இவர்கள் இருவரும் தற்போது கைகோர்க்க உள்ளதால், இந்தப் படம் தமிழ் சினிமாவின் அடுத்த லெவல் ஹாரர் மூவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ராகவா லாரன்ஸ், தனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் 'காஞ்சனா 4' படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பூஜா ஹெக்டே, நோரா ஃபதேகி ஆகியோர் நடிக்கும் இப்படமே 'காஞ்சனா' பிரான்சைஸின் இறுதிப் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மறுபுறம், இயக்குநர் அஜய் ஞானமுத்து அருள்நிதி நடிப்பில் உருவான 'டிமான்டி காலனி 3' படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்துள்ளார். இந்த இரண்டு பெரிய படங்களின் ரிலீஸிற்குப் பிறகு, லாரன்ஸ்-அஜய் ஞானமுத்து இணையும் புதிய மெகா பட்ஜெட் பேண்டஸி ஹாரர் படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வழக்கமாக, லாரன்ஸ் படங்களில் காமெடி தூக்கலாக இருக்கும், அஜய் படங்களில் பயமும் விறுவிறுப்பும் அதிகமாக இருக்கும். இப்போது இவர்கள் இருவரும் இணைவதால், 'காஞ்சனா' ஸ்டைல் மாஸ் எலிமெண்ட்டுகளும், 'டிமான்டி காலனி' ஸ்டைல் மிரட்டலான திரைக்கதையும் இணைந்து தியேட்டர்களில் ஒரு பெரிய சம்பவமாக அமையப் போவது உறுதி. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனம் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com