இரட்டையர்- திரை விமர்சனம்

இரட்டையர்- திரை விமர்சனம்

Published on
இரட்டையர்- விமர்சனம்(2.5 / 5)

கதை

நாயகி அபிநயா, கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் காரில் செல்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக கார் விபத்து ஏற்படுகிறது. இதில் தந்தையை இழக்கும் இரட்டை சகோதரிகள், அதே விபத்தில் தாய் அபிநயா கடுமையாக காயமடைந்ததாக அறிகிறார்கள்.

சில காலத்திற்குப் பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து வீட்டிற்கு திரும்பும் அபிநயா, முன்பு இருந்ததை விட வித்தியாசமாக நடந்து கொள்ள ஆரம்பிக்கிறார்.

அவரது நடவடிக்கைகள் நாளுக்கு நாள் இரட்டை சகோதரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்கள் தங்களது குடும்பத்தை பற்றிய அதிர்ச்சிகரமான உண்மைகளை தேட ஆரம்பிக்கிறார்கள்.

இறுதியில் இரட்டை சகோதரிகளின் சந்தேகம் தீர்ந்ததா? அபிநயா வித்தியாசமாக நடந்துக் கொள்ள காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அபிநயா இந்த படத்தின் மிகப்பெரிய பலம். உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட தாயாக அவர் கொடுத்திருக்கும் நடிப்பு கதைக்கு தேவையான மர்மத்தையும் பதற்றத்தையும் உருவாக்குகிறது. குறிப்பாக முகபாவனைகள் மற்றும் உடல்மொழி மூலமாக கதாபாத்திரத்தை நம்ப வைக்கிறார்.

இரட்டை சகோதரிகளாக நடித்துள்ள அனுமிதா, அனுஷிதா இருவரும் கதையின் முக்கியமான நகர்வுகளுக்கு காரணமாக இருக்கிறார்கள். அவர்களது பயம், குழப்பம் மற்றும் உண்மையை கண்டுபிடிக்க போராடும் தருணங்கள் இயல்பாக இருக்கிறது. வெங்கட் சுபா, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட மற்ற நடிகர்களும் கதைக்கு தேவையான பங்களிப்பை சரியாக கொடுத்திருக்கிறார்கள்.

இயக்கம்

அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் தம்பையா, வழக்கமான த்ரில்லர் கதையை எடுத்திருந்தாலும், அதை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் சொல்ல முயற்சித்திருக்கிறார்.

முதல் பாதியில் கொஞ்சம் மெதுவாக நகரும் படம், இரண்டாம் பாதியில் வேகம் பிடிக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸை நோக்கி வரும் திருப்பங்கள் படத்தின் மீது இருந்த ஆர்வத்தை அதிகரிக்கின்றன.

தேவையற்ற கதாபாத்திரங்களை சேர்க்காமல், குறைவான மனிதர்களை வைத்து கதையை நகர்த்தியிருப்பது படத்தின் பலமாக அமைந்துள்ளது.

சில காட்சிகளில் இன்னும் கூடுதல் அழுத்தம் இருந்திருக்கலாம் என்ற உணர்வும் ஏற்படுகிறது. உளவியல் த்ரில்லர் படங்களுக்கு தேவையான மர்மம், சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் ஆகியவற்றை மையமாக வைத்து உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளர் முகமது அமீன், மர்மமான சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்.

இசை

இசையமைப்பாளர் ஜி.கே.வி-யின் பின்னணி இசை பல இடங்களில் சஸ்பென்ஸை கூட்டுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com