

இந்தியாவின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக இணையதளம் வழியாக சுய கணக்கெடுப்பு செய்யும் பணியானது கடந்த 17-ந்தேதி தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அவரின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து, பொதுமக்களையும் தங்களின் தரவுகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து பொதுமக்கள் பலரும் தங்களின் தரவுகளை இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவோம் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இசை மனிதர்களை ஒன்றிணைப்பதைப் போல, மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-இல் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சுயக் கணக்கெடுப்பு (Self-Enumeration) 17.07.2026 முதல் 31.07.2026 வரை நடைபெறுகிறது. இந்தக் காலப்பகுதியில் https://se.census.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தங்களது குடும்ப விவரங்களை சுயமாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதனைத் தொடர்ந்து 01.08.2026 முதல் 30.08.2026 வரை நடைபெறும் வீட்டுப் பட்டியலிடல் (HLO) கட்டத்தில் வருகை தரும் கணக்கெடுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
துல்லியமான மக்கள்தொகைத் தகவல்கள் நாட்டின் சிறந்த திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகின்றன. அனைவரும் இணைந்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-ஐ வெற்றிகரமாக நடத்துவோம் என்று கூறியுள்ளார்.