'காட்ஸில்லா' திரைப்படப் புகழ் இளம் நடிகை கெய்லி ஹாட்டில் கார் விபத்தில் உயிரிழப்பு-திரையுலகம் அதிர்ச்சி!

2024-இல் வெளியான இதன் இரண்டாம் பாகத்தில் நடித்ததற்காகச் சிறந்த இளம் நடிகருக்கான 'சாட்டர்ன் விருது' தேர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
Kaylee Hottle
Published on

ஹாலிவுட்டின் மெகா பட்ஜெட் திரைப்படங்களான 'காட்ஸில்லா வெர்சஸ் காங்' மற்றும் 'காட்ஸில்லா x காங்: தி நியூ எம்பயர்'ஆகியவற்றில் 'ஜியா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் புகழ்பெற்ற மாற்றுத்திறனாளி (செவித்திறன் அற்ற) இளம் நடிகை கெய்லி ஹாட்டில் (வயது 18) அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து எவ்வாறு நிகழ்ந்தது?

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள ஃபிரடெரிக் கவுண்டி பகுதியில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:50 மணியளவில் இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. கெய்லி ஹாட்டில் பயணித்த ஹோண்டா அக்கார்ட் கார், எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரத்தில் இருந்த வடிகால் அமைப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

காரை ஓட்டிச்சென்ற 19 வயது இளைஞர் மற்றும் மற்றொரு பயணியும் லேசான காயங்களுடன் தப்பிய நிலையில், தீவிர காயமடைந்த கெய்லி ஹாட்டில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அதிகப்படியான வேகமே இந்த விபத்திற்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் காவல்துறை தெரிவித்துள்ளது.

தந்தையின் உருக்கமான வீடியோ பதிவு:

கெய்லி ஹாட்டிலின் குடும்பத்தினர் அனைவரும் செவித்திறன் குறைந்தவர்கள் என்பதால், அவரது தந்தை ஜோஷுவா ஹாட்டில் அமெரிக்க சைகை மொழியில் முகநூலில் வெளியிட்ட வீடியோ பதிவில் தன் மகளின் மரணத்தை கண்ணீருடன் உறுதிப்படுத்தினார்.

"என் மகளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவரது இதயத்துடிப்பு நின்றுவிட்டது. அவளுடன் கழித்த இந்த 18 ஆண்டுகள் எனக்கு மிகவும் பாக்கியமானது. ஆனால், இன்னும் கொஞ்ச காலம் அவர் எங்களுடன் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

மகளின் உடலை வாங்குவதற்காக மேரிலாண்ட் சென்று கொண்டிருக்கிறேன்." மேலும் விபத்தை ஏற்படுத்திய டிரைவரைத் தான் மன்னித்துவிட்டதாகவும், இந்தச் சம்பவத்துக்காக அவரது வாழ்க்கை பாழாகிவிடக்கூடாது என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

திரையுலகில் ஏற்படுத்திய தாக்கம்:

2021-இல் வெளியான 'காட்ஸில்லா வெர்சஸ் காங்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கெய்லி, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாளமாகத் திகழ்ந்தார். இப்படத்தில் மாபெரும் கிங் காங் மிருகத்துடன் சைகை மொழியில் பேசி நட்பை வெளிப்படுத்தும் 'ஜியா' என்ற பழங்குடிச் சிறுமியின் கதாபாத்திரம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்தது.

சாட்டர்ன் விருதுப் பரிந்துரை:

2024-இல் வெளியான இதன் இரண்டாம் பாகத்தில் நடித்ததற்காகச் சிறந்த இளம் நடிகருக்கான 'சாட்டர்ன் விருது' தேர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

ஹாலிவுட் நட்சத்திரங்களின் இரங்கல்:

கெய்லியுடன் இணைந்த நடித்த பிரபல நடிகை மில்லி பாபி பிரவுன் , அலெக்சாண்டர் ஸ்கார்ஸ்கார்ட் மற்றும் ரெபெக்கா ஹால் ஆகியோர் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

கெய்லி பயின்று வந்த டெக்சாஸ் செவித்திறன் குறைந்தோருக்கான பள்ளியும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது. இளம் வயதிலேயே ஹாலிவுட்டில் தனக்கென தனிமுத்திரை பதித்த ஒரு திறமையாளரின் மறைவு சினிமா உலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com