

ரேடியோ ஜாக்கியாக இருந்து, நடிப்பு மற்றும் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் ஆர்.ஜே. பாலாஜி. திரைத்துறை தாண்டி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் போது கிரிக்கெட் வர்ணனையாளராகவும் மக்களை மகிழ்வித்து வருகிறார். இந்த நிலையில், ஆர்.ஜே. பாலாஜி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகராக இருந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு திரைத்துறை சார்ந்த பலரும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "கருப்பு தொடங்க காரணமாக இருந்த அந்த மனிதருடன்!!! வாவ்…! தற்போது அவரை தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சராக சந்திப்பதை நம்பவே முடியவில்லை!!! அதே அன்பு, அரவணைப்பு, கருணை மற்றும் அமைதி… அன்புள்ள விஜய் சார், எல்லாவற்றிற்கும் நன்றி," என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவுடன் முதலமைச்சர் விஜய்யுடன் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் இணைத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.