கோலிவுட்டில் அடுத்த வாரிசு: தனுஷ் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் மகன் யாத்ரா!

யாத்ரா இந்த அறிமுகத்திற்காக சிக்ஸ் பேக் உடலமைப்பை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
Dhanush to Direct His Son Yatra's Acting Debut in Kollywood.
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், இயக்குநருமான தனுஷின் மூத்த மகன் யாத்ரா, விரைவில் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்த மெகா பட்ஜெட் திரைப்படத்தை தனுஷே இயக்கவிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

ஏற்கனவே தனுஷ் இயக்கிய ‘ராயன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் யாத்ரா கேமரா கையாண்ட புகைப்படங்கள் வைரலாகின. மேலும், தனுஷின் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பட பாடலில் சில வரிகளையும் எழுதியிருந்தார். தற்போது தீவிர நடிப்பு மற்றும் நடனப் பயிற்சிகளுக்குப் பிறகு, அவர் ஹீரோவாக களம் இறங்குகிறார். இந்தத் திரைப்படம் யாத்ராவின் தாத்தாவான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பில்லா’, ‘முரட்டுக்காளை’ பாணியிலான ஒரு பக்கா மாஸ் கமர்சியல் என்டர்டெய்னராக இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பையைச் சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான 'ஆர் டேக் ஸ்டுடியோஸ்' இந்தத் திரைப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. இந்நிறுவனம் தற்போது தனுஷ் மற்றும் மம்மூட்டி நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் #D55 திரைப்படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்குப் பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்குஇசையமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. யாத்ரா இந்த அறிமுகத்திற்காக சிக்ஸ் பேக் உடலமைப்பை உருவாக்கி வருவதாக ஜி.வி.பிரகாஷ் சமீபத்திய நிகழ்வொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இப்படத்தின் முதற்கட்ட ப்ரோமோ படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து பிரம்மாண்டமான பூஜை போடப்பட இருக்கிறது. படத்தின் அதிகாரப்பூர்வப் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் (2027) தொடக்கத்திலோ ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் யாத்ராவுடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய நடிகர்கள் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தயாரிப்பு தரப்பிலிருந்து விரைவில் வெளியாகவுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com