

‘டி.சி.’ படம் முதல் நாளில் ரூ.5.70 கோடி வசூலித்துள்ளது.
தமிழ் சினிமாவில் இதுவரை இயக்குநராக கலக்கிய தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள லோகேஷ் கனகராஜ் நடிகராக புதிய பரிமாணம் எடுத்து அசத்தியுள்ள படம் ‘டி.சி.’
லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்த முதல் படமான ' டி.சி.' இந்திய பாக்ஸ் ஆபிஸில் சுமாரான வசூலைப் பெற்றுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கிய இந்த படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் நிகரமாக ரூ. 4.1 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பல்வேறு மொழிகளில் வெளியான இந்தப் படம், நேற்று நாடு முழுவதும் 3,500-க்கும் மேற்பட்ட காட்சிகளில் திரையிடப்பட்டது. இதன் இந்திய வசூல் ரூ. 4.70 கோடியாக இருந்தது, அதே வேளையில் உலக அளவில் வெளியானதில் கூடுதலாக ரூ.1 கோடியை வசூல் குவித்துள்ளது. இதனால் ‘டி.சி.’ படம் முதல் நாளில் ரூ.5.70 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வாமிகா கபி நடித்துள்ளார். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘டிசி’ படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால், வன்முறை நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
தேவதாஸ் மற்றும் சந்திரா என்ற பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’.
கேங்ஸ்டரான லோகேஷ் கனகராஜ் தனது கூட்டாளிகளுடன் போலீசாரின் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கொள்ளையடிக்கிறார். ஒரு போலீஸ் அதிகாரியைக் கொடூரமாக கொலையும் செய்கிறார். இதையடுத்து ஒட்டலில் பதுங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜை போலீசார் கைது செய்வதுடன், அவருடன் நட்பு பாராட்டிய பாடகி சஞ்சனாவை சுட்டு வீழ்த்துகிறார்கள்.
போலீசாரின் பிடியிலிருந்து தப்பும் லோகேஷ் கனகராஜ், எதிர்பாராத ஒரு சந்திப்பில் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் வாமிகா கபியைச் சந்திக்கிறார். பிடிக்காத வாழ்க்கை வாழ்ந்து வரும் வாமிகா கபி. ஒரு கட்டத்தில் லோகேஷ் கனகராஜுடன் பயணிக்கிறார்.
உயிருக்கு பயந்து ஓடும் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி சந்திக்கும் போராட்டங்கள் என்ன? என்பதே பரபரப்பான மீதிக்கதை.