

சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரபல நடிகரும், இயக்கநருமான ஆர். பார்த்திபன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “நான் சாதி, மதமற்ற சமுதாயம் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து உழைத்து வருகிறேன்.
என்னுடைய திரைப்படங்களிலும் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன். இந்த நிலையில் நான் சாதி, மதமற்றவன் என்ற சான்றிதழை கேட்டு தாசில்தாரிடம் விண்ணப்பித்த போது எனக்கு வழங்கவில்லை. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த சாதி, மதமற்றவன் என்ற சான்றிதழை பெற்றேன்.
ஆனால் கடந்த 2025-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் கேட்டு யாராவது விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் வகையில் வருவாய்த்துறை அதிகாரிகள் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இதுகுறித்து, அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதுவரை அரசும் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
எனவே சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் கேட்பவர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கும் வகையில் சட்டம் அல்லது அரசாணை அல்லது சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ். ஏ. தர்மதிகாரி நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது . மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுவுக்கு நான்கு வாரத்திற்குள் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.