

தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி, அண்மையில் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட தவெக தலைவர் விஜய் குறித்து அவரது தாயார் சோபா சந்திரசேகர் மனம் திறந்துள்ளார்.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு கடந்த மே 4-ஆம் தேதி தங்களது இல்லத்திற்கு நேரில் வந்த முதலமைச்சர் விஜய், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை நெகிழ்ச்சியுடன் கட்டிப்பிடித்து, "என்ன பா.. உங்க ஆசை நிறைவேறிடுச்சா?" என்று கேட்டுள்ளார். அதற்கு எஸ்.ஏ.சி உணர்ச்சிவசப்பட்டு, "ஆமாப்பா..." என்று பதிலளித்துள்ளார்.
விஜய்யை ஒரு முதலமைச்சராகப் பார்க்க வேண்டும் என்பது அவரது தந்தையின் நீண்ட நாள் கனவாக இருந்துள்ளது. மக்களின் பிரம்மாண்ட ஆதரவைக் கண்டபோதே அவர் ஒருநாள் முதலமைச்சராவார் என்று எஸ்.ஏ.சி தீர்க்கமாக நம்பியதாக சோபா சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டிலேயே தான் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகவும், தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் விஜய் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். "விஜய் அதைச் சொன்னதும் நானும் எஸ்.ஏ.சியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். 'சினிமா நடிகர் என்பது வேறு, அரசியல்வாதி என்பது முற்றிலும் வேறு; நன்றாக யோசித்துக் கொள்' என்று நான் கூறினேன்.
ஆனால் விஜய் மிகவும் உறுதியாக, 'இல்ல மா.. நான் முடிவு பண்ணிட்டேன்' என்று பதிலளித்தார். அதற்கு மேல் அவரிடம் சொல்வதற்கு எங்களிடம் வார்த்தைகள் இல்லை." என்றார். மேலும், அரசியல் முடிவை எடுத்தபோது, தந்தை எஸ்.ஏ.சி அவரிடம் சினிமா நடிப்பையும் அரசியலையும் சமமாக பேலன்ஸ் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால், அதற்கு உடன்படாத விஜய், "ஒரே நேரத்தில் இரண்டையும் செய்ய முடியாது. மக்களுக்காக முழுமையாக இறங்கும்போது அரசியல் மட்டுமே என் பிரதானமாக இருக்கும். "இல்ல பா.. நான் டிசைட் பண்ணிட்டேன்!" என்று மிக அழுத்தமாகத் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துவிட்டு முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ளார்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் மே 4 அன்று குடும்பத்தினரைச் சந்திக்க வந்த விஜய், வீட்டில் பணிபுரியும் அலுவலக மற்றும் வீட்டுப் பணியாளர்கள் உட்பட அனைவருடனும் அன்போடு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், தாயார் சோபா சந்திரசேகர் தனது மகனுக்கு ஒரு பிரத்யேக காப்பை பரிசாக வழங்கி வாழ்த்தியுள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் இந்த அரசியல் பயணம் திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்பதும், 2023-லேயே சினிமா வாழ்க்கையை முழுமையாகத் துறந்துவிட்டு மக்கள் பணிக்காக மட்டுமே உழைக்க வேண்டும் என்ற தீர்க்கமான நோக்கத்தோடு அவர் களம் கண்டுள்ளார் என்பதும் இந்த பேட்டியின் மூலம் தெளிவாகியுள்ளது.