கான் திரைப்பட விழா 2026: ஆலியா பட் புறக்கணிக்கப்பட்டாரா? தாய் சோனி ரஸ்தான் பதிலடி!

"சமூக ஊடகங்களில் வரும் சில வெற்று சத்தங்கள் உண்மையான யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதில்லை."
Cannes Film Festival 2026: Was Alia Bhatt snubbed?
Published on

பிரான்சில் நடைபெற்ற புகழ்பெற்ற கான் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட பாலிவுட் நட்சத்திரம் ஆலியா பட் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தார். அதற்கு அவரது தாயாரும் மூத்த நடிகையுமான சோனி ரஸ்தான் மற்றும் ஆலியா பட் ஆகிய இருவருமே சமூக வலைத்தளங்களில் நேரடியாகப் பதிலடி கொடுத்துள்ளனர்.

இந்த ஆண்டு கான் விழாவின் சிவப்பு கம்பளத்தில் ஆலியா பட் வலம் வந்தபோது எடுக்கப்பட்ட ஒரு சிறிய வீடியோ அண்மையில் வைரலானது. அதில் ஆலியா பட் கேமராக்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தபோது, சர்வதேச புகைப்படக் கலைஞர்கள் சிலர் தற்காலிகமாக வேறு பக்கம் கவனம் செலுத்தியது போலக் காட்டப்பட்டது.

இதனைப் பார்த்த சமூக வலைத்தளவாசிகள், "ஆலியா பட்டை சர்வதேச ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை, அவர் புறக்கணிக்கப்பட்டார்" என்று கிண்டல் செய்து மீம்களைப் பகிர்ந்து வந்தனர்.

ஆலியா பட்டுக்கு ஆதரவாக எழுத்தாளர் ஷுனாலி குல்லர் ஷ்ராஃப் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில்,"கான் விழா என்பது எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஒரு இடம், அங்கு கேமரா கோணங்கள் மாறுவது சாதாரண விஷயம். ஆனால் நம் மக்கள் ஒரு வெற்றிகரமான பெண்ணை கீழே இறக்கிக் கொண்டாடக் காரணம் தேடுகிறார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவிற்கு ஆலியா பட்டின் தாயார் சோனி ரஸ்தான் கமெண்ட் செக்ஷனில் ஆதரவு தெரிவித்து ஒரு பதிவிட்டுள்ளார்.

"சமூக ஊடகங்கள் என்பது அன்பு, தகவல், பொழுதுபோக்கு என பல விஷயங்கள் நிறைந்தது... அதே சமயம் அங்கு நிறைய 'வெறுப்பும்' நிறைந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, இது நம் சமூகத்தின் தற்போதைய மனநிலையை வெளிப்படுத்துகிறது. இது பல ஆண்டுகள் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒரு சுவாரசியமான சமூகவியல் விவாதம்."

மேலும் மற்றொரு பேட்டியில், "சமூக ஊடகங்களில் வரும் சில வெற்று சத்தங்கள் உண்மையான யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதில்லை. கானுக்குச் சென்ற ஒவ்வொருவரும் அங்கு சும்மா செல்லவில்லை, இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவே சென்றுள்ளனர். எனவே இந்த எதிர்மறை விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம் நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை" என்று சோனி ரஸ்தான் விளக்கியுள்ளார்.

இந்நிலையில், விமர்சகர் ஒருவர் ஆலியா பட்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், *"என்ன ஒரு பரிதாபம், உங்களை அங்கு யாருமே கவனிக்கவில்லை" என்று கமெண்ட் செய்திருந்தார்.

அதற்கு ஆலியா பட் மிகவும் லாவகமாக,"ஏன் பரிதாபப்படுகிறீர்கள் அன்பே? நீங்கள் என்னைக் கவனித்துவிட்டீர்களே!"என்று நக்கலாகப் பதிலளித்து டிராலார்களின் வாயை அடைத்துள்ளார். அவரது ரசிகர்கள் இந்த சாதுரியமான பதிலை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com