

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் கடந்த ஜூன் 4 அன்று வெளியான விளையாட்டு சார்ந்த அதிரடித் திரைப்படம் ‘பெத்தி’. ரிலீசான 5 நாட்களில் உலகளவில் 315 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்து வரும் இத்திரைப்படத்தை, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நேரில் பார்த்து தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.
திரைப்படத்தைப் பார்த்த பின் அல்லு அர்ஜுன் பதிவிட்டதாவது: "நேற்று இரவு #Peddi திரைப்படம் பார்த்தேன். என் அன்புச் சகோதரர் ராம் சரணின் நடிப்பு என்னை முற்றிலுமாக மிரள வைத்துவிட்டது. ஒரு எதார்த்தமான, முரட்டுத்தனமான நடிப்பு, அசாதாரணமான உடல்வாகு மாற்றம் மற்றும் சிறப்பான நடன அசைவுகள் என அனைத்து அம்சங்களிலும் அவர் பின்னிப் பெடலெடுத்துள்ளார்.
என் சகோதரனை நினைத்து நான் மனப்பூர்வமாக பெருமைப்படுகிறேன். இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஜான்வி கபூரின் அச்சியம்மா கதாபாத்திரம் சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியதால் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதற்காக இயக்குநர் புச்சி பாபு சனா வருத்தம் தெரிவித்து, அந்த குறிப்பிட்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்கியுள்ளார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், அல்லு அர்ஜுன் ஜான்வி கபூருக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், "படத்தின் நாயகி ஜான்வி கபூருக்கு எனது அன்புகள். அத்துடன் ஜெகபதி பாபு சாருக்கும் மற்ற கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார். டத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அல்லு அர்ஜுன், படத்தின் கேப்டனான இயக்குநர் புச்சி பாபு சனாவை பாராட்டி, "ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக நேர்த்தியாக கையாண்டு, ராம் சரணை மிக உயர்ந்த இடத்தில் கொண்டு போய் நிறுத்தியதற்கு பாராட்டுகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அல்லு அர்ஜுனின் இந்த வாழ்த்துப் பதிவுக்கு இயக்குநர் புச்சி பாபு சனா, "உங்களுடைய இந்த ஊக்கமும், ஆசிர்வாதமும் ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் மிகப்பெரிய பலம்" என நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். ஏற்கனவே ராம் சரண் மற்றும் அல்லு அர்ஜுன் ரசிகர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த சூழலில், அல்லு அர்ஜுனின் இந்த பாசிட்டிவ் விமர்சனம் ஒட்டுமொத்த மெகா ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.