நிஜ வாழ்விலும் 'தேவதை' சிம்ரன்.. மாற்றுத்திறனாளி சிறுமியின் நடனக் கனவை நனவாக்கி அசத்தல்!

பாலு ஷர்மா இயக்கும் ' டீச்சர்' என்ற படத்திலும் சிம்ரன் நடிக்கிறார்
Simran Gift Nisha
Published on

தமிழ் திரையுலகின் எவர்கிரீன் 'நடனப் புயல்' நடிகை சிம்ரன், தனது தீவிர ரசிகையான 10 வயது மாற்றுத்திறனாளி சிறுமியின் நீண்ட நாள் கனவை நேரில் சந்தித்து நிறைவேற்றியுள்ளார்.

அந்தச் சிறுமியுடன் இணைந்து நடனமாடியதுடன், அவருக்குப் புதிய மிதிவண்டி ஒன்றையும் பரிசாக வழங்கி ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

குறையை வென்ற நடனத் திறமை

சென்னையைச் சேர்ந்த 10 வயது சிறுமி நிஷா, ஒரு கை இல்லாமல் பிறந்த மாற்றுத்திறனாளி ஆவார். பல எமோஷனல் மற்றும் உடல் ரீதியான சவால்களை எதிர்கொண்ட போதிலும், நிஷா தனது புன்னகையையும் நம்பிக்கையையும் கைவிடவில்லை.

முறையாக நடனம் கற்றுத்தர யாரும் இல்லாத நிலையில், தொலைக்காட்சியில் வரும் நடனங்களை, குறிப்பாக சிறு வயது முதலே தனக்கு பிடித்த நடிகை சிம்ரனின் நடனங்களைப் பார்த்துத் தனியாகவே நடனம் பழகியுள்ளார்.

"சில நேரங்களில் எனக்கு ஒரு கை இல்லை என்று நினைத்து வருத்தப்படுவேன். ஆனால் நான் ஆடும்போது எல்லாவற்றையும் மறந்துவிடுகிறேன். நடனம்தான் என் உலகம்" என்று சிறுமி நிஷா உருக்கமாகக் கூறியுள்ளார்.

சமூக ஆர்வலர்

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முகமது ஆஷிக் என்பவர், நிஷாவின் நடனத் திறமையையும் விடாமுயற்சியையும் உலகிற்குக் காட்ட அவரது நடன வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோக்கள் பல்லாயிரக்கணக்கான மக்களைச் சென்றடைந்தது மட்டுமில்லாமல், நடிகை சிம்ரனின் பார்வைக்கும் சென்றடைந்தது.

மேலும், நிஷா தினமும் பள்ளிக்கு நடந்து செல்வதாகவும், அவளுக்கு ஒரு சைக்கிள் வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை என்றும் ஆஷிக் சிம்ரனிடம் தெரிவித்துள்ளார்.

'ஆல் தோட்ட பூபதி' பாடலுக்கு சிம்ரனுடன் நடனம்

சிறுமியின் கதையைக் கேட்ட சிம்ரன், நிஷாவை நேரில் சந்திக்கத் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, நடிகர் விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான 'யூத்' படத்தின் சூப்பர் ஹிட் பாடலான ‘ஆல் தோட்ட பூபதி’ பாடலுக்கு சிம்ரன் முன்னிலையில் நிஷா நடனமாடிக் காட்டியுள்ளார்.

இதனைக் கண்டு வியந்த சிம்ரன், தானும் நிஷாவுடன் இணைந்து அந்தப் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடினார். டிவியில் பார்த்து நடனம் பழகிய சிறுமி, இன்று தன் கனவு நாயகியுடன் இணைந்தே ஆடியது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

சைக்கிள் பரிசு

பள்ளிக்கு நடந்து செல்லும் நிஷாவின் சிரமத்தைக் குறைக்க, சிம்ரன் அவளுக்கு ஒரு புத்தம் புதிய சைக்கிளை பரிசளித்தார்.

பரிசை வழங்கியதோடு மட்டுமின்றி, "நடனத்தின் மீதுள்ள ஆர்வம் போலவே படிப்பிலும் முழுக் கவனம் செலுத்த வேண்டும். கல்வியையும் உனது கனவுகளையும் சமமாகப் பாக்க வேண்டும், தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்" என்று சிம்ரன் அந்தச் சிறுமிக்கு அன்போடு அறிவுரை வழங்கினார்.

இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, "சிம்ரன் நிஜ வாழ்விலும் ஒரு பேரன்பு கொண்ட தேவதை" எனப் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.

சிம்ரனின் அடுத்தடுத்த திரைப்படங்கள்

சினிமாத்துறையில் சிம்ரன் தற்போது அஸ்வத் மரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த் ஒரு மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தை, ஆர்.கே.எஃப்.ஐ கமல்ஹாசன் தயாரிக்கிறார். மேலும் , பாலு ஷர்மா இயக்கும் ' டீச்சர்' என்ற படத்திலும் அவர் நடிக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com