லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், பிரபல தமிழ் நடிகர் ஜீவா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான 'தகப்பன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையதளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
'கிடா' திரைப்படத்தின் மூலம் உணர்வுப்பூர்வமான கதையைத் தந்து ரசிகர்களின் மனதை வென்ற இயக்குநர் ரா. வெங்கட் இத்திரைப்படத்தை எழுதி இயக்கி வருகிறார்.
இத்திரைப்படம் மதுரையைச் சுற்றியுள்ள கிராமத்துப் பகுதிகளை மையமாகக் கொண்டு, தந்தை மற்றும் மகனுக்கு இடையேயான ஆழமான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உணர்வுப்பூர்வமான டிராமா பாணியில் உருவாக்கப்பட்டு வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் ஜீவா மற்றும் ஒரு சிறுவன் படிக்கட்டில் அமர்ந்திருப்பது போன்ற காட்சி, குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஜீவாவின் முந்தைய நகைச்சுவைத் திரைப்படமான 'தலைவர் தம்பி தலைமையில்' படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்தின் போஸ்டரில் 'கருப்பசாமி' திருவிழா பின்னணி காட்டப்பட்டிருப்பது கதைக்களத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரே கட்டமாக மிக விறுவிறுப்பாக நடைபெற்றது. படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில உணர்வுப்பூர்வமான காட்சிகளைக் கண்ட உள்ளூர் மக்கள், படக்குழுவினரை நேரில் பாராட்டி மகிழ்ந்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து பிரபல மலையாள நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடிக்கிறார்.
கே. குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு எம். சுகுமார் ஒளிப்பதிவையும், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பையும் மேற்கொள்கின்றனர். மார்ஷல் ராபின்சன் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இத்திரைப்படம் வரும் டிசம்பர் 2026 அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.