சினிமா படப்பிடிப்பு இன்று முதல் ரத்து - தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட அதிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று முதல் சினிமா படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பலருக்கு வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. #Strike #CinemaShoot
சினிமா படப்பிடிப்பு இன்று முதல் ரத்து - தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்
Published on

தமிழ்நாட்டில் மொத்தம் 1,100 சினிமா தியேட்டர்கள் உள்ளன.

தற்போது அனைத்து தியேட்டர்களிலும் டிஜிட்டல் முறையில் படங்கள் திரையிடப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள் இந்த சேவையை செய்து வருகின்றன. இதற்கான கட்டணத்தை பட தயாரிப்பாளர்களே கொடுத்து வருகிறார்கள்.

இதற்காக வசூலிக்கப்படும் கட்டணம் அதிகமாக உள்ளது. விளம்பர கட்டணத்தையும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களே பெற்றுக் கொள்கின்றன. இதனால் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை திரையிட லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்யும் நிலை உள்ளது.

இந்த கட்டணத்தை குறைக்கக் கோரி கடந்த 1-ந்தேதி முதல் புதிய படங்கள் திரையிடுவதை படத் தயாரிப்பாளர்கள் நிறுத்திவிட்டனர்.

இன்று முதல் சென்னை தவிர, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டு விட்டன. சினிமா படப்பிடிப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படும் என்று படத் தயாரிப்பாளர்கள் அறிவித்து இருந்தனர்.

அதன்படி இன்று சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விஜய்யின் 62-வது படம், தனுஷ், சூர்யா, விக்ரம், விஷால், கார்த்தி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடங்க இருந்த அஜித்தின் புதிய படம் உள்பட பல்வேறு புதிய படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

வருகிற 23-ந்தேதி முதல் வெளியூர், வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதனால் தமிழ்ப்பட உலகம் முழுவதும் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

திரை உலகை நம்பி 2 லட்சம் பேர் நேரடியாக வேலை செய்கிறார்கள். 3 லட்சம் பேர் மறைமுகமாக வேலை வாய்ப்பு பெறுகிறார்கள். இந்த வேலைநிறுத்தம் காரணமாக 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழக்கிறார்கள் என்று திரைத்துறையினர் தெரிவித்துள்ளனர். #Strike #CinemaShoot

X

Maalai Malar
www.maalaimalar.com