உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் - சின்மயி பேட்டி

மீடூ புகார்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய சின்மயி, உண்மை கண்டறியும் சோதனைக்கு தான் தயாராக இருப்பதாக கூறினார். #MeToo #Chinmayi
உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் - சின்மயி பேட்டி
Published on

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பெசண்ட் நகர் கடற்கரையில் கேஸ்டலெஸ் கலெக்டிவ் என்னும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பறை இசையோடு தொடங்கிய இந்த நிகழ்வில் சினிமா, கலையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். பாடகி சின்மயி பாடல்கள் பாடினார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இந்த விழாவில் பங்கேற்று பாடல்களை பாடியது மிகுந்த மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. இந்த விழாவின் நோக்கமே சமத்துவம் தான். இன்றைய சூழ்நிலையில் இதுபோன்ற விழாக்கள் அவசியம்.

பறை, மேளம், நாதஸ்வரம், தவில் போன்ற பாரம்பர்ய இசையை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த கலைகள் அழியாமல் இருக்கும்.

இந்த விழாவில் மோடி என்ற பெயரை பயன்படுத்த காவல்துறை அனுமதிக்கவில்லை. நாங்கள் லலித் மோடி பற்றி பாடுகிறோம் என்றாலும் விடவில்லை.

மீடூ விவகாரத்தில் சட்டத்தில் மாற்றம் வேண்டும். அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என்றார்கள். இதுவரை அமைக்கப்படவில்லை. அரசிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. பாதிக்கப்பட்டோர் பலர் வழக்குபதிவு செய்தும் நடவடிக்கை இல்லை. ‘‘சட்டம் எங்களை கைவிட்டுவிட்ட நிலையில் தான் இருக்கிறோம். டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளேன்’. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சின்மயி கூறும் புகார்கள் உண்மையாக இருந்தால் ஏன் சட்டப்படி புகார் அளிக்கவில்லை என டுவிட்டரில் சிலர் விமர்சித்தனர். வழக்கறிஞர் ஒருவர் ’உண்மை கண்டறியும் சோதனை தான் ஒரே வழி’ என்று கூற ஆத்திரமடைந்த சின்மயி, ’நான் தயார். மீடியாவை வர சொல்லுங்கள்.

ஒரே நேரத்தில் இருவருக்கும் நடக்கட்டும். அப்போது உண்மை தெரியும். கணவரை தவிர நீ யாரிடம் செல்கிறாய் என என்னை கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, ஆம்பளையாக இருந்தால் ‘உண்மை கண்டறியும் சோதனைக்கு ஏற்பாடு செய்துவிட்டு கால் செய்யுங்கள்’.

இவ்வாறு அவர் கூறினார். #MeToo #Chinmayi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com